பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான விவாதம், இன்றைய தினத்துக்கு (23) பிற்போடப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விவாதம் நேற்று (22) நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது. விவாதத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த விவாதம் பிற்போடப்பட்டதாக ஜெனிவா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்ததுடன் அதன் மீதான வாக்கெடுப்பும் இன்று நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் அதற்கான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் அமர்வின் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விவாதமும் வாக்கெடுப்பும் இன்றைய தினத்திற்கு ஒத்திப்போடப்பட்டது.

நட்பு நாடுகளின் ஆதரவுடன் மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் பல்வேறு நாடுகளுடனும் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,இலங்கை தொடர்பான யோசனையை பிரிட்டன், கனடா, ஜேர்மன்,மெசிடோனியா மலாவி உள்ளிட்ட 6நாடுகள் முன்வைத்துள்ள நிலையில் இன்று நடைபெறும் விவாதத்தின்போது சில நாடுகள் அதில் தலையீடு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் 47நாடுகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் இலங்கையானது நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்றும் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தன.

எவ்வாறாயினும் பிரிட்டனின் பிரேரணைக்கு கனடா, ஜெர்மன், மெசிடோனியா உட்பட சில நாடுகள் அனுசரணை வழங்கியுள்ள நிலையில் மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்திலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணைக்கு எதிராக அணி திரளுமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் 193அங்கத்துவ நாடுகளில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்களிக்கும் தகுதி 47 நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. அவற்றில் இருபத்தொரு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகவும் மேலும் சில நாடுகள் நடுநிலை வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Related posts