வழக்கமாக என்னைப் படத்திலிருந்து வெளியேற்றத்தான் பரிந்துரை செய்வார்கள் என்று ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கங்கணா ரணாவத் பேசினார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவி’. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ‘பாகுபலி’ கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இன்று (மார்ச் 23) கங்கணா ரணாவத்தின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கங்கணா ரணாவத் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். கங்கணா ரணாவத் வருகையால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விழாவில் கங்கணா ரணாவத் பேசியதாவது:
“இது மிகவும் விஷேசமான ஒரு நாள். இன்று எனக்கு 34-வது பிறந்த நாள். நான் பிறந்ததற்கே பெருமைப்படுகிறேன். இந்த உலகத்துக்குள் என்னைக் கொண்டு வந்த என் பெற்றோருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ‘தலைவி’ படத்துக்கு விஜயேந்திர பிரசாத் சார் என்னைப் பரிந்துரை செய்யவில்லை என்றால் இந்தப் பயணம் தொடங்கியிருக்காது. வழக்கமாக என்னைப் படத்திலிருந்து வெளியேற்றத்தான் பரிந்துரை செய்வார்கள்.
அரசியல் என்றால் எனக்கு மிகவும் பயம். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் எனக்குப் பரிச்சயமில்லை. அவரிடம் ஏன் இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களால் முடியும் என்று கூறினார். காரணம் படத்தின் நடிகர் தேர்வு சரி இல்லையென்றால் படம் மிகப்பெரிய தோல்வி அடைந்துவிடும். ஆனால், அவர் என் மீது வைத்த நம்பிக்கைதான் எனக்கு தைரியத்தைக் கொடுத்தது.
நாயகியை மையமாகக் கொண்ட படங்களில் நடிக்க பெரும்பாலான நடிகர்கள் தயாராக இருப்பதில்லை. இப்படத்தில் நடிக்கச் சம்மதித்த அரவிந்த்சாமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நிறைய ஆண் நடிகர்கள் பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பார்கள் என்று நம்புகிறேன்.
தென்னிந்திய சினிமாவில் நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால் அது தமிழோ அல்லது தெலுங்கோ இங்கு வாரிசு அரசியல் இருந்தாலும், இங்கே குழு மனப்பான்மை இல்லை. குரூப்பிசம், கேங்கிசம் இல்லை. வெளியிலிருந்து வருபவர்களை ஒதுக்குவதில்லை. அவர்களை அனைவரும் ஆதரிக்கின்றனர். இங்கே எனக்குக் கிடைத்த ஊக்கம், அன்பு ஆகியவற்றால் நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. நான் இங்கே நிறையப் படங்கள் செய்ய விரும்புகிறேன்.விஜய் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் வார்த்தைகள் போதாது. என்னுடைய திறமைகள் குறித்து என்னைச் சந்தேகம் கொள்ளச் செய்யாத ஒரு நபரை நான் இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். நான் வழக்கமாக உணர்ச்சி வசப்படுவதில்லை. என்னை என் திறமைகள் மீது என்னை நம்பிக்கை கொள்ள வைத்த ஒரு நபர் அவர்தான் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நடிகையை எப்படி நடத்த வேண்டும் என்பதை இயக்குநராக நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்”
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்தார்.
இறுதியாக இயக்குநர் விஜய் குறித்துப் பேசும்போது, கண் கலங்கினார் கங்கணா ரணாவத்.