இந்தி நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். அமீர்கானை சமீபத்தில் சந்தித்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உரிய நடைமுறைகளை கடைபிடித்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நடிகர் அமீர்கான் வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
——
நடிகர் சல்மான்கான் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நாடு முழுவதும் அரசியல், திரைப் பிரபலங்கள் என பல்வேரு தரப்பினரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
முன்னதாக நேற்று நடிகர் சஞ்செய் தத் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சஞ்செய் தத் பகிர்ந்து இருந்தார்.