294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு இன்று (மார்ச் 27) முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒருசில இடர்பாடுகளை தவிர பெரும்பாலும் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கரஹ்ப்பூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்குவங்காளத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி வங்காளதேசத்திற்கு சென்று அங்கு மேற்குவங்காளம் குறித்து பாடம் எடுக்கிறார். இது முழுமையான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது வங்காளதேசத்தை சேர்ந்த நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றார். இது குறித்து வங்காளதேச அரசுடன் பாஜக பேசியது. மேலும், அந்த நடிகரின் விசாவை ரத்து செய்தது. தற்போது தேர்தல் இங்கு (மேற்குவங்காளம்) நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, நீங்கள் (பிரதமர் மோடி) வங்காளதேசத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் வாக்கு கேட்கின்றனர். உங்களின் (பிரதமர் மோடி) விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது?. இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்’ என்றார்.
வங்காளதேசத்தின் சுதந்திர பொன் விழாவில் (50-வது ஆண்டு) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று வங்காளதேச நாட்டிற்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.