தெலுங்கு திரைப்படமான ஜாதி ரத்னாலு அமெரிக்காவிலும் அதிக வசூலைப் பெற்று அசத்தி வருகிறது.
‘மஹாநடி’ இயக்குநர் நாக் அஷ்வின் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் ‘ஜாதி ரத்னாலு’. முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் 11 அன்று வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அமெரிக்காவிலும் இந்தப் படம் அதிக வசூலைப் பெற்றுள்ளது. வெளியான ஒரு மாதத்துக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது (ரூ. 7.25 கோடி). வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஏற்கனவே இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாயை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா ஊரடங்கில் திரையரங்குகள் மூடப்பட்ட பின் இப்போது தான் அமெரிக்காவில் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டு வருகின்றன. அப்படி திறக்கப்பட்ட பின் அதிக வசூல் செய்திருக்கும் இந்தியத் திரைப்படமாக ஜாதி ரத்னாலு பெயர் பெற்றுள்ளது.
“வெகுஜன மக்களுக்கு பொழுதுபோக்கைத் தரும், மந்த நிலையை உலுக்கும் திறன் இருக்கும் திரைப்படங்களை எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஜாதி ரத்னாலு சிரிப்பதற்கான ஒரு காரணமாக உருவெடுத்துள்ளது. தயாரிப்பாளர்களாக நாங்கள் அதைத்தான் எதிர்பார்த்தோம். ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் சரியாகச் சென்று சேரும் வகையில் நகைச்சுவையை எழுதிய கதாசிரியர்களுக்குப் பெரிய நன்றி. வெளிநாடுகளில் படம் பெற்றுள்ள வெற்றிக்கு நாங்கள் இந்த உலகுக்கே இப்போது நன்றி சொல்ல வேண்டும்” என்று படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்வப்னா சினிமா தரப்பு தெரிவித்துள்ளது.
நகைச்சுவைத் திருவிழா என்று பாரட்டப்பட்டிருக்கும் ஜாதி ரத்னாலு திரைப்படத்தை தெலுங்கு திரையுலகத்தின் நட்சத்திரங்கள் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்டா பலரும் பாராட்டியுள்ளனர்.