உன்னதத்தின் ஆறதல்! இரட்சிப்பின் வசனம். வாரம் 21. 13

சிலுவையும் பாவமன்னிப்பின் நிச்சயமும்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்திப்போம்.

இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். லூக்கா 23:42.

வேதம் சொல்கிறது. 1கொரிந்தியர் 1:18. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் (தேவநீதியைத் தேடதவர்களுக்கு, பாவத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வில்லாதவர்களுக்கு) பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப் படுகிற நமக்கோ (தேவநீதியை நாடி தேவனைத் தேடுகிறவர்களுக்கு) அது தேவபெலனாயிருக்கிறது (நிச்சயமாக இருக்கிறது). இந்த பெரியஉண்மையை விளங்கிக்கொள்ள நாம் பின்வரும் வேதப்பகுதியை கவனிப்போம். குற்றவாளிகளாகிய (கள்வர்கள்) வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒருகுற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி, நீ இந்த ஆக்கினைக் குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்;குத்தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23: 32-33, 39-43.

தங்கள் கடைசி மூச்சைப்பிடித்துக் கொண்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறவர்களோடு இடைபடும் ஆண்டவரே என்று நீங்கள் நினைத்தது அல்லது ஜெபித்தது உண்டா? ஏனெனில் கடைசி நிமிடநேரத்தில்கூட மனிதனை மாற்றக்கூடியது, காப்பாற்றக்கூடியது ஆண்டவருடைய சிலுவை ஒன்று மட்டுமே. இந்த உலகில் வாழ்வு உள்ளவரை மனிதனுக்கு தேவநம்பிக்கை ஒன்றுதான் நம்பிக்கையானது.

இயேசுவோடு இரு கள்வரை சிலுவையில் அறைந்தனர். ஒருவன் இயேசுவிடம் கேலியாக மற்றவர்களை இரட்சித்தானே, தன்னையும் இரடசிக்கலாமே என்று இகழ்தான். ஆனால் மற்றவனோ மரணநேரத்திலும் தன் தவறுகளை உணர்ந்து இயேசுவை நோக்கிப்பார்த்தான்.

அவரே தன் நம்பிக்கை என்பதை உணர்ந்தான். இருகைகளில் ஆணிகள் கடாவப்பட்டு கைகளை விரித்தவராக ஒன்றும் இல்லாதவராக தொங்கிய வேளையிலும் யாரும் தரக்கூடாததை அவராலே தரமுடியும் என்பதை அவன் நம்பினான். பாடுகளிலும் மரணத்திலும் அவரைவிட வேறு ஒன்றிலும் நம்பிக்கையாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினான். அந்த நம்பிக்கையை தன் வாயினால் அறிக்கை செய்தான். தன் இறுதி வினாடியையும்கூட விணாக்க அவன் விரும்பவில்லை. இயேசுவிடம் இருந்து ஓர் நிச்சயமான நிச்சயத்தைப் பெற்றுக்கொண்டான்.

அதுதான் தேவன் கொடுத்த நிச்சயம். இயேசுவை நோக்கி, ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். வேதம் சொல்கிறது பரதீசைப் பெற்றுக்கொண்டான் என்று. இதில் நாம் கவனிக்க வேண்டியது, என்னுடனே என்ற வார்த்தையை. அதாவது தேவனோடே இருப்பாய் என்ற நிச்சயத்தை வாக்களித்தார்.

தேவனுக்குப் பிரியமான அலைகள் நேயர்களே, காலம் போய்விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒருவன் தேவனிடம் வருவதற்கு நேரகாலம் முக்கியமானது அல்ல. கடைசி மூச்சின் இறுதிக்கணம்கூட மனித ஜீவியத்தில் முக்கியமானது. ஆகவே இதை வாசித்துக் கொண்டிருக்கும் வேளைகூட தேவனன்டை உன்னை ஒப்புக்கொடுக்க உனக்கு பேதுமானதாகும்.

நீ வாழும்போது தேவனிடத்தில் எமது பாவங்களை அறிக்கையிட்டு, பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்று அவருக்காக வாழ உன்னை ஒப்புக்கொடுப்பாயாகில், இயேசு உன்னுடைய வாழ்வில் தரும் விடுதலையையும், மகிழ்ச்சியையும் ஒருவரும் உன்னிடத்தில் இருந்து பிரிக்முடியாது. அது நிலையானதும் நிரந்தரமானதும் கூட.

லெந்துகாலம் என அழைக்கப்படும் இந்த பாஸ்க்காகாலத்தில் நாம் செய்ய வேண்டியது எம்மை நாமே ஆராய்ந்து அறிந்து கொள்வது. ஆனால் நாம் அதைப்பற்றி அறிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் எமக்கு அதிகளவு முன்னர் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அதிகளவில் அறியக்கூடிய சூழ்நிலைகள் எமக்கு முன்பாக உள்ளது. அவற்றை நாம் பிரயோசனப் படுத்துவோமா?

ஒரு உண்மைமைமட்டும் அறிந்து சிந்தித்துக் கொள்வோம். உனக்கு உலகம் வேண்டுமா? சிலுவை சுமந்த இயேசு வேண்டுமா? குற்றவாளிகள் சிலுவையில் அறையப்பட்டபோது அது ஓர் இழிவான மரமாக இருந்தது. ஆனால் நமது ஆண்டவர் இயேசு அறையப்பட்டபோது அது உலகிற்கு விடுதலையைக் கொடுக்கும் பலிபீடமாக மாற்றப்பட்டது. அன்று அந்த பலிப்பொருளான இயேசுவையும், பலிபீடத்தையம் உற்றுப்பார்த்தவர்கள் பாவமன்னிப்பைப் பெற்று நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டார்கள். நீங்களும் அந்த நித்திய ஜீவனைப்பெற்று வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அந்த தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற உன்னை ஒப்புக்கொடுப்பாயா? அப்படியானால் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபமூலம் உன்னை ஒப்புக்கொடு.

எனக்காக பலியை நிறைவேற்ற இவ்வுலகிற்கு வந்த என் இயேசுவே, எனது பாவங்களுக்கு நான் பலியாகமல் நீரே எனக்காக பலியாகி என்னை விடுவித்ததற்காக உமக்கு நன்றி அப்பா. நீர் பலியானதால் நான் பெற்றுக்கொண்ட நித்திய ஜீவனை என்றும் நான் இழந்து விடாமல் காத்துக்கொண்டு வாழ உதவி செய்யும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts