தமிழ் பட உலகின் முதல் வரிசை கதாநாயகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
இவர்களில் ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளம் வாங்கி, தமிழ்பட உலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்து வருகிறார். இப்போது அவர், ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். அரசியலில் இருந்து அவர் விலகிய பின், ரசிகர்கள் மத்தியில் அவருடைய செல்வாக்கு எப்படி இருக்கிறது? என்பதை ‘அண்ணாத்த’ படத்தின் ‘ரிசல்ட்’ தீர்மானிக்கும்.
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் காட்டிய வழியில், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார், கமல்ஹாசன். அரசியல் பிரவேசம், மார்க்கெட் அந்தஸ்தை மேலும் உயர்த்தி பிடிக்குமா? என்பதை தேர்தல் முடிவுகள் உறுதி செய்யும்.
ரஜினிகாந்த் இடத்தை பிடிக்க மிக வேகமாக முன்னேறி வருகிறார், விஜய். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்துக்கு ரூ.80 கோடி சம்பளம் வாங்கி, தன் நட்சத்திர அந்தஸ்தை நிரூபித்து இருக்கிறார். இவருடைய படங்கள் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்வதாக பேசப்படுகிறது.
விஜய்க்கு சரி போட்டியாக இருப்பவர், அஜித். தமிழ் பட உலகின் அழகான கதாநாயகன் என்று வர்ணிக்கப்படும் இவர், ‘ஓபனிங் கிங்’ ஆக, வசூல் மன்னனாக இருந்து வருகிறார். படத்துக்கு படம் இவருடைய மார்க்கெட் நிலவரம் உயர்ந்து கொண்டே போகிறது.
தமிழ் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவராக, ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு கதாபாத்திரமாக வாழ்ந்து வருபவர், விக்ரம். மிக சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கி வரும் இவர், அதிரடி நாயகனாகவும் பிரகாசித்து வருகிறார்.
சிவாஜி, கமல்ஹாசன் பாணியில் கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு சிறந்த நடிப்பை தந்து கொண்டிருப்பவர், சூர்யா. ‘பருத்தி வீரனாக’ அறிமுகமாகி, ‘சுல்தான்’ வரை ரசிகர்களின் ரசனை அறிந்து படங்களை கொடுத்து வருகிறார், கார்த்தி. இருவருக்குமே தெலுங்கு மார்க்கெட் இருந்து வருவது, சிறப்பு.
பந்தயத்தில், எதிர்பாராத குதிரை முந்திக்கொண்டு வருவது போல் தமிழ் பட நாயகர்களுக்கான போட்டியில், தொடர் வெற்றிகளை குவித்து வருபவர், தனுஷ். சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை 2 முறை வென்றதில் இவருடைய மார்க்கெட் நிலவரம், உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன், ‘கமர்சியல் ஹீரோ’வாக தன்னை நிரூபிக்க போராடி வருகிறார். கதாநாயகனாகவும், வில்லனாகவும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்கிறார், விஜய் சேதுபதி. இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.