இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.
இதன்மூலம் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடிக்கிறது.
ஆனால், ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை இந்தியா விஞ்சியுள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை கணக்கிட்டு வெளியிட்டு வரும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம்- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 82 ஆயிரத்து 869- பேருக்கும், அமெரிக்காவில் 62,283- பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொருத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,211- பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631- பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.