அஜித்குமார் நடிக்கும் ‘வலிமை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே எல்லா ஏரியாக்களின் வினியோக உரிமையும் விற்பனையாகி வருகிறது. இதன் தமிழ்நாடு உரிமை மட்டும் ரூ. 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஆகிய இருவரும் வாங்கியிருக்கிறார்கள்.
ரூ.60 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.20 கோடி லாபம் வைத்து ரூ. 80 கோடிக்கு விற்க இருப்பதாக பேசப்படுகிறது.
படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு சண்டை காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர், ‘டப்பிங்’ பேசி முடித்து விட்டார். அவர் நடிக்க இருக்கும் ஒரே ஒரு சண்டை காட்சியை ஏதாவது ஒரு வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
—–
2 வருடங்களுக்குப்பின், மீண்டும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கருவாக வைத்து 2 வருடங்களுக்கு முன், ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’ என்ற படம் தொடங்கப்பட்டது. அஜய் குமார் என்ற புதுமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்வதாக அறிவிப்பு வெளியானது.
இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. 2 வருடங்களுக்குப்பின், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பள்ளி மாணவி அனிதாவாக ஸ்வேதா, டாக்டர் அனிதாவாக அருஷ் என்ற புது முகங்கள் நடிக்கிறார்கள்.