தனுஷ் நடித்த, மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.
நாட்டில் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. வருவாய் பாதிப்புகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மொத்தமுள்ள 2021 திரையரங்குகளில் நாளை முதல் மால்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் தனித்து இயங்கும் தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மாரி செல்வராஜ் இயக்கிய நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்.தாணு அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டரில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று எஸ்.தாணு பதிவிட்டுள்ளார்.
இதன்படி, கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால், காலையிலேயே தியேட்டர்கள் முன் திரண்ட ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
திரையரங்குகள் முன் வைக்கப்பட்டு உள்ள பல அடி உயர கட் அவுட்டில் இருந்து மலர்களை ரசிகர்கள் தூவினர். இதனை கீழேயிருந்து ரசிகர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்தும் சென்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.