தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும் நினைவுகூர்ந்தும் பகிரங்கமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் அனைவரும் இனிமேல் தகுதி தராதரம் பாராது உடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களும் இவ்வாறு கைது செய்யப்படுவார்களென்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
—–
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடியோயை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது “பி“ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதவான் இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து இளைஞனை எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
——-
12 பேரை கொலை செய்த நபர் கைது.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய லொகுகே லசந்த பிரதீபன் எலியாஸ் எனும் தங்கல்லே சுத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த வருடம் மிரிஸ்ஸ பகுதியில் அமில ஹெட்டிகே எனும் நபர் கொலை உட்பட 12 கொலை சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருடன் சம்பத் ரணசிங்க எனும் 41 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
—–
யாழ். மாநகர சபையின் நேற்றைய அமர்வுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என்று மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பில் தம்முடன் கலந்துரையாடப்படாமையே இன்றைய புறக்கணிப்பிற்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்பதற்காக சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் தலைமை தீர்மானித்திருந்தது.
எவ்வாறெனினும், எமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்காண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவை தொடர்பாக எம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீக கடமையாகும்.
ஆனால் காவல்படை உருவாக்கம் தொடர்பாக எம்மோடு கலந்துரையாடப்படவில்லை. இதுதொடர்பில் எமது கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலேயே இன்றைய அமர்வுகளை புறக்கணித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.