யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட நகரின் சுத்தம், சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணியாளர்களை நியமித்தது அவர்களுக்கு சீருடை வழங்கியது தொடர்பான செயலை அறியாத் தவறாக கருதி மணிவண்ணனை விடுவித்து மாநகர சபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவண செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (09) கேட்டுக்கொண்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் வவுனியாவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந் நிலையில் அவரை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
…….
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உடனமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவின் பணிப்பாளராக இருந்து நிஷாந்த சொய்ஸா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
—–
சம்பள நிர்ணய சபை அங்கீகரித்த தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை தோட்ட நிறுவனங்கள் நேற்று (09) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைவாக நாள் ஒன்றிற்கான அடிப்படை சம்பளம் 900 ரூபாவும், வரவு செலவு கொடுப்பனவாக 100 ரூபாவும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அவர்களின் நாளாந்த சம்பளம் 750 ரூபாவாக காணப்பட்டது.
1,000 ரூபா சம்பளம் தொடர்பில் நீண்ட காலமாக தோட்ட நிறுவனங்களுக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. 1,000 ரூபா நாளாந்த சம்பள விடயம் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்கத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும், தோட்டத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்திருக்கிறார்.
கொட்டகலயில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.