’99 சாங்ஸ்’ படத்தை புதுமுகங்களை வைத்து உருவாக்கியது ஏன் என்பது குறித்தும், படம் பார்த்து ஷங்கர் உள்ளிட்ட இயக்குநர் நண்பர்கள் கூறிய கருத்துகள் குறித்தும் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான ’99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி அளித்துள்ளார்.
விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி குறித்து சிறு அறிமுகம்?
10 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. அதை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். நிறைய விளம்பரப் படங்களை எடுத்திருக்கிறார். அவர் இசை அறிஞர், சண்டைக் கலைஞர், விளையாட்டு நுணுக்கங்களை அறிந்தவர். அவர் பல திறன்கள் கலந்த கலவையாக இருந்ததால், அவருடன் பேசி இந்தப் படத்தை உருவாக்கினோம்.
நடிகர்கள் தேர்வில் உங்களுடைய பங்கு என்ன? ஏன் புதுமுகங்களை வைத்து இப்படம் படமாக்கப்பட்டது?
இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் இருவரும் இசை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு வருடம் இசைக் கருவிகள் குறித்துப் பயிற்சி பெற்றனர். பின் அவர்கள் அமெரிக்கா சென்று நடிப்புக் கலையைக் கற்றனர். புதுமுகங்களை வைத்து படம் எடுத்தால் கால்ஷீட் பிரச்சினை இருக்காது. சுதந்திரமாகப் படம் எடுக்கலாம். அதுதான் காரணம்.
உங்களுடைய இயக்குநர் நண்பர்கள் இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார்கள்?
நிறைய பேரிடம் காட்டவில்லை. ஹாலிவுட் படம் போல் இருக்கிறது என இயக்குநர் ஷங்கர் கூறினார். கலை மற்றும் கமர்ஷியல் கலந்த கலவையாக இருப்பதாக அட்லி கூறினார். புதுவிதமாக இருக்கிறது என சிலர் கூறினர். இது மக்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்தார்.