பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டின் வரவில் சகல மக்களின் மனங்கள் தோறும், வரலாற்று வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்வு பூக்கட்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானாந்தா சித்திரைப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். நான் கூறும் எமது மக்களின் புது மகிழ்வென்பது தத்தமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சகல மக்களும் சரிநிகர் சமன் என்ற சமத்துவ உரிமைகளோடு தலை நிமிர்வுடன் வாழ்வதேயாகும்.
அரசியலுரிமை, அபிவிருத்தி, அன்றாட வாழ்வியல் உரிமை என எமது மக்கள் விரும்பும் எழிலார்ந்த வாழ்வை உருவாக்க சகல அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் யதார்த்த பூர்வமான செயல் முறைக்கு முன்வர வேண்டும். அரசியலுரிமை என ஒரு புறமும், அபிவிருத்தி என இன்னொரு புறமும் மட்டற்ற வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வழங்குவதால் எமது மக்கள் தொடர்ந்தும் திக்கற்று நிற்கும் துயர் நிலையே நீடித்து வருகிறது.
ஆகவே, எமதிரு கண்களாக விளங்கும் அரசியலுரிமையும், அபிவிருத்தியும் இணைந்த எமது மக்களின் இலட்சியக்கனவுகள் ஈடேற வேண்டும்.
எமது மக்களின் சகல இழப்புகளுக்குமான பரிகாரம் தேடும் துயர் துடைப்புகள் துரிதமாக நிகழ வேண்டும்.
வறுமையற்ற வாழ்வு நோக்கி நிமிர்ந்தெழுந்து சகல மக்களும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திடும் சூழல் நிலவ வேண்டும். சமகால சூழலில் சரியான திசைவழி நோக்கி பயணிப்பதன் உடாக எமது மக்கள் எண்ணிய எதிர்கால இலட்சியங்களை எட்டிவிட முடியும். இந்த ஆழ்மன நம்பிக்கையோடு சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் சகல மக்களுக்கும் எனது அறிவார்ந்த வழிகாட்டலுடன் வாழ்த்துக்களையும் கூறுகின்றேன். இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் தேசிய நல்லிணக்க சிந்தனை செயற்பாடுகளை சகல தரப்பு மக்களும் பலப்படுத்துவதே ஒளி வீசும் உயரிய வாழ்விற்கு உரமிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
—-
வட மாகாண ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தமிழ் சிங்கள புத்தாண்டு, நாட்டின் அனைத்து மக்களுக்கும் வளமான சுபிட்சத்தையும், ஆரோக்கியமான வாழ்வினையும், மகிழ்ச்சியான சூழலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துவதோடு அனைவரதும் புத்தாண்டுப் பிரார்த்தனைகளில் தானும் இணைந்து கொள்வதாக, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இப் புத்தாண்டினை ஒன்றுபட்டு கொண்டாடும் இலங்கை மக்கள் அனைவரும் கோவிட்-19 மட்டுமின்றி அனைத்துவித அசௌகரியங்களையும், அநீதிகளையும் களைவதற்கு ஒன்றுபட்டு நின்று, இலங்கை தீவினை ஒரு சிறந்த நாடாக மாற்றும் திடசங்கற்பத்தினை இந்த பெருநாளில் மேற்கொள்வோம் என்று வேண்டி, எனது இனிய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
—–
புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அங்கஜன் எம்.பி.
‘பிலவ’ வருஷப்பிறப்பு தடைகளைத் தகர்த்து நாட்டு மக்கள் அனைவருக்கும் புது விடியலைத் தருவதாக அமைய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் ;எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு சித்திரை மாதத்திற்கு உண்டு. தனிச்சிறப்பு மிக்க இம்மாதத்தில் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து புது விடியலுக்கான பயணத்தை ஆரம்பிப்போம்.தடுப்புச் சுவர்களை உடைத்தெறிந்து அபிவிருத்தியில் புது மைல்கல்லை எட்டுவோம் எனவும் நம்புகிறேன்.பிலவ வருஷத்தில் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் புது விடியல் உண்டாக வேண்டும்.
சவால்கள் அனைத்தையும் முறியடித்து ;அபிவிருத்தியை முன்னெடுத்து அதனூடாக நாட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பிலவ வருடம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன்.
அத்துடன் கொரோனா எனும் கொடிய நோய்த் தொற்றில் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் நாட்டு மக்கள் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் திடசங்கற்பம் பூட வேண்டும். நாட்டு மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டின் மகிமையை முழுமையாக அனுபவித்திட வேண்டும். பிறக்கின்ற புத்தாண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும்,சுபீட்சத்தையும்,நோய் நொடியற்ற புது வாழ்வையும் தருவதாக அமைய வேண்டும். என மேலும் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.