இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து விட்டது. ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக் காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,18,302 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,47,866 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 15,69,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
—–
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் உள்ளது.
மேலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்புக்காக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது.
திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குனர் செல்வ விநாயகம், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மேலும் பல அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.
மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து துல்லியமாக கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்று விவாதிக்கப்பட்டது.
வார இறுதியில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பொது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது போல் இல்லாமல் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.
மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தனர். இதில் பிளஸ்-2 தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.