நீ இறைவனோட நிழல்ல நிம்மதியா இளைப்பாறப்பா என்று விவேக் மறைவு குறித்து சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார். “அன்புத் தம்பி விவேக்…
முப்பது வருஷத்துக்கு முந்தி தி. நகர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் மேட்லி ரோட்டில் இருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த கல்யாணத்துக்கு நான் வந்திருந்தேன். அங்கே கே.பாலச்சந்தர் சாரும் வந்திருந்தார். அந்தக் கல்யாண மேடையில ஒல்லிப் பிச்சானா ஒரு பையன் எல்லா சினிமா கலைஞர்களையும் போல மிமிக்ரி பண்ணி பிச்சு உதறிகிட்டிருந்தான். நானும் பாலச்சந்தரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அடுத்த வருஷமே பாலச்சந்தர் சார் அவர் படத்தில் அந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துத் தூக்கிவிட்டார். அந்த ஒல்லிப் பையன்தான் விவேக்.
அதுக்கப்புறம் நீ மகத்தான கவைஞனா மாறி உலகத்தையே உன் பக்கம் இழுத்துகிட்ட.. எந்தப் பொது நிகழ்ச்சியில என்னப் பார்த்தாலும் “சிவக்குமார் சார் அங்கே வந்திருக்கிறார். இவராலே தி.நகர் பாண்டி பஜார்ல பான்பராக் – வெற்றிலை – பாக்கு – பீடி சிகரெட்- எல்லாம் எந்தக் கடையிலும் வியாபாரம் ஆக மாட்டேங்குது. ஏன்னா , சார் பக்கத்து தெருவுல குடியிருக்கறாரு… ஏன் சார் இப்படி பண்றிங்க.” என்று மேடையிலேயே என்னை எதிர்மறையாகப் பாராட்டி பேசுவியே . ரொம்பக் குறுகிய காலத்திலே ‘சின்ன கலைவாணர்’ என்று எல்லோரும் பாராட்டும் அளவுக்கு உச்சம் தொட்ட கலைஞன்
நீ அப்துல் கலாம் ஐயாவோட வார்த்தையைக் கேட்டு ஒரு கோடி மரம் நடணும்கிற இலட்சியத்தில 33 லட்சத்து 33 ஆயிரம் மரங்கள் நட்டியே. ஆக்சிஜன் வேணும்கிறதுக்காக மரம் நட்ட உன்னை சாவுங்கற விஷவாயு தீண்டிடுச்சி. நிழலுக்கு மரம் வளர்த்த அன்புத்தம்பி… நீ இறைவனோட நிழல்ல நிம்மதியா இளைப்பாறப்பா. உன் நகைச்சுவையை நினைக்கிற போதெல்லாம் எங்களுக்குச் சிரிப்பு வரும். ஆனால் கண்ணிலிருந்து எங்களையும் அறியாமல் கண்ணீர் வரும்”
இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.