தெலுங்கு நடிகர் நானி நடித்துவரும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ திரைப்படத்துக்காக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ராகுல் சங்க்ரீதியான் இயக்கத்தில் நானி நாயகனாக நடிக்கும் படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. கொல்கத்தாவில் நடக்கும் வரலாற்றுக் கற்பனைக் கதையான இது மறு ஜென்மம் என்கிற கருவை வைத்து எழுதப்பட்டுள்ளது. சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி ஆகியோருடன் ராகுல் ரவீந்திரன், ஜுஷூ சென்குப்தா, முரளி சர்மா, அபினவ் கோமதம் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.
சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ள இந்தக் கதைக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக வேறொரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. அப்போது முதலில் ஏ.ஆர்.ரஹ்மானும், பின்னர் அனிருத்தும் இசையமைப்பார்கள் என்று கூறப்பட்டது. தயாரிப்பாளர் மாறியதும் படத்தின் பட்ஜெட் மாறுதலால் இசையமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் மாற்றப்பட்டனர்.
கடைசி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 10 ஏக்கரில் ரூ.6.5 கோடி செலவில் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த கால கொல்கத்தா நகரம், துர்கை கோயில் ஆகியவைப் போல இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா தலைமையில் இது உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது விவேக் ஆத்ரேயாவின் ’அண்டே சுந்தரானிகி’ திரைப்படத்தில் நானி நடிக்கவிருக்கிறார்.