நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை

நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை என்று நடிகை இலியானா கூறியுள்ளார்.
பல்விந்தர் சிங் இயக்கத்தில் இலியானா நடித்து வரும் படம் ‘அன்ஃபேர் அண்ட் லவ்லி’. நாட்டில் வெள்ளைத் தோல் நிறத்தின் மீதான மோகம் குறித்தும், நிறப் பாகுபாடு குறித்து இப்படம் பேசுகிறது. தற்போது ஹரியாணாவில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்தில் ரன்தீப் ஹூடா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் குறித்து நடிகை இலியானா கூறியுள்ளதாவது:
”இப்படத்தின் கதை மிகவும் அழகான முறையில் எழுதப்பட்டுள்ளது. இது வெளிப்படையான முறையில் நம் முகத்துக்கு நேராகப் பிரச்சாரம் செய்யாது. மாறாக ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தைப் பேசக்கூடிய ஒரு பொழுதுபோக்குக் கதை. நாட்டில் நிறம் குறித்த தங்கள் குறுகிய பார்வையை மக்கள் விசாலமாக்கிக் கொள்ளும் வகையில் இது இருக்கும்.
நிறம் ஒருவருடைய அழகைத் தீர்மானிப்பதில்லை. இரவில் வானம் அழகாக இருப்பதில்லையென்றாலும், அப்போதுதான் நம்மால் நட்சத்திரங்களைக் காண முடியும் என்பதைப் போல.
பாலிவுட்டில் பல நிறங்களைக் கொண்ட பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சமமான வகையில் நேசிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளனர். திரைத்துறையில் நிறப் பாகுபாடு இருப்பதில்லை. மாறாக நாட்டில் அதிகமாக இருக்கிறது”.
இவ்வாறு இலியானா கூறியுள்ளார்.
சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அன்ஃபேர் அண்ட் லவ்லி’ படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts