உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க இனம், மதம் அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் வருட நிறைவை நினைவு கூரும் வகையில் நேற்றைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் விசேட வழிபாடுகளும் திருப்பலியும் நடைபெற்றன.
ஓமல்பே சோபித்த மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள்,பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி வணக்கத்துக்குரிய பிரையன் வுடயின்வே, அமெரிக்க தூதுவர் உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை;
சகலதும் மறைக்கப்பட்டு குற்றவாளிகள் நிரபராதிகளாக்கப்படும் செயற்பாடுகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என நாம் உறுதியாக தெரிவிக்கின்றோம்.
அப்பாவி மக்களை படுகொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக யார் அதை செய்தார்கள்? எவருடைய தேவையை நிறைவேற்றுவதற்காக இது மேற்கொள்ளப்பட்டது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அது தொடர்பில் உண்மை நிலையை கண்டறிவதற்கு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு மற்றும்ஏனைய சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கும் முடியாமல் போயுள்ளமை தெரிகிறது. குழந்தைகளும் சிறுவர்களும் பெரியவர்களும் என நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பது எமக்கு கவலையளிக்கின்றது. இதன் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருப்பதாக அனைவருக்கும் தற்போது தெளிவாக புரிகிறது. அதற்கிணங்க இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த அப்பாவி படுகொலைக்கான காரணங்களை வெளிப்படுத்துவது மனிதாபிமானமான செயல் என்பதை நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.
அதற்காக இனம், மதம், பிரதேசம் என்ற பாகுபாடின்றி முழு மனித குலமும் ஓர் அணி திரள வேண்டும். குண்டு தாக்குதல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொண்டாலும் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு இன்னும் முடியாமல் உள்ளது. அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை. அதற்கு அரசியல் ரீதியான மோசடி தன்மைகளே காரணம்.
குறிப்பாக நாம் முஸ்லிம் மக்களிடம் கேட்டுக் கொள்வது அடிப்படைவாத தீவிரவாதத்தை நிராகரிப்பதற்கு முன்வாருங்கள். மதத்தின் பெயரில் படுகொலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய அமைப்புக்களுக்கு எதிராக தாமே முன் வாருங்கள் . ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எமக்காக காத்திரமான குரல் எழுப்புவதற்கு நீங்கள் இன்னும் கூட முன்வரவில்லை. அவ்வாறு நீங்கள் எம்மோடு இணைந்திருந்தால் அதற்கான சாத்தியங்களை எட்டியிருக்கலாம். முழு நாடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. இனம், மதம், மொழி என்றில்லாமல் கட்சி தராதரம் பார்க்காமல் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு நீதியை பெற்றுக்கொள்ள அனைவரும் ஓர் அணி திரள வேண்டும்.
நேற்றைய இந்த நிகழ்வை முன்னிட்டு கொச்சிக்கடை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. போலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் வீதிச் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. திருப்பலியில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த விசுவாசிகள் பலத்த சோதனைக்கு மத்தியிலேயே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.