ஆயிரம் ரூபா சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது சூழ்ச்சித் திட்டம் அரங்கேறி வருகின்றது. கம்பனிகளுடன் இணைந்து தொழிலாளர்களின் தொழில் சுமையை அதிகரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் தொழில் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது. அதுமட்டுமல்ல தொழில் சுமைகள் எதுவும் அதிகரிக்கப்படாமலேயே ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால் சம்பள உயர்வு விவகாரத்தில் இன்று சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.
ஒரு நாள் பெயருக்கு 18 கிலோ கொழுந்தே பறிக்க வேண்டும். அந்த அளவை 20 கிலோவாக அதிகரிப்பதற்கு கம்பனிகள் முயற்சித்து வருகின்றன. தொழிலாளர்களையும் வற்புறுத்துகின்றன. இந்நிலையில் தோட்டத் தலைவர்களை அழைத்து, 20 கிலோ பறிக்குமாறு இ.தொ.கா. அழுத்தம் கொடுத்துள்ளது. எனவே, தோட்டக் கம்பனிகளுடன் மீண்டும் உறவு வைத்து இ.தொ.கா. இவ்வாறு செய்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவு குறித்து முடிவு எடுக்கப்படும் என தோட்டக்கம்பனிகள் கூறின. இன்று மாறுபட்ட கருத்தை முன்வைத்து வருகின்றன. 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு தொழிலாளர்களை கம்பனிகள் நிர்ப்பந்தித்து வருகின்றன. இதனால் மக்களும் குழம்பிபோயுள்ளனர். அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளது. அதன்பின்னர் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்.
தற்போது எடுக்கப்படும் 18 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்க வேண்டாம் என தொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். தொழிலாளர்களுக்காக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்.” – என்றார்.