பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கைது நடவடிக்கைக்காக நடுநிசியில் தனது வீட்டுக்கு CID யினர் வந்துள்ளதாகவும், உரிய கைது உத்தரவை காண்பிக்கவோ, காரணத்தை தெரிவிக்கவோ இல்லை என, அவர் கைதாவதற்கு முன்னர், அவரது பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான தன்னை கைது செய்வது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்தீர்களா என வினவிய போதிலும் அதற்கும் எவ்வித பதிலும் தரவில்லை என தெரிவித்துள்ள, ரிஷாட் பதியுதீன் எம்.பி. இதை ஒரு அரசியல் பழிவாங்கலாக தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது ரிஷாட் பதியுதீன் எம்.பியை கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் வைத்தும், ரியாஜ் பதியுதீனை வெள்ளவத்தை பிரதேசத்திலும் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவித்த அவர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இ.போ.ச. பஸ்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி CIDயினால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.