உங்கள் தவறுகளை அங்கீகரியுங்கள்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிராத்திப்போம்.
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான். நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். நீதிமொழி 9:9. ( வச. 1-10)
சில வருடங்களுக்கு முன் புற்றுநோய் ஆராட்சியாளர் டாக்டர். ராபர்ட் குட் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்றை பத்திரிகையில் வாசித்தேன். அவருடைய சிறந்த குணாதிசயங்களைக் குறித்து மிகவும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. அவர் புதிய கருத்துக்களையுடையவர் என்றும், தனக்கு அளிக்கப்படும் எந்தச் செய்திகளையும் பயன்படுத்தும்; திறமை படைத்தவர் என்றும் அந்த கட்டுரை விபரித்தது. என்றாலும் அவரைக் குறித்து அளிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட செய்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அவரின் ஆய்வுரைகளில் ஒரு தவறு கண்டுபிடிக்கப்படும்போது, அவர் அதை ஏற்றுக்கொண்டு, அதை உடனடியாக சரி செய்வதாக அக்கட்டுரையில் எழுதப்பட் டிருந்தது. மேலும் அவருடன் வேலை செய்த ஒரு டாக்டர் இவ்வாறு கூறியதாக எழுதியிருந்தது. டாக்டர். ராபர்ட் குட் தன்னுடைய கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்று ஒரு போதும் கூறுவதில்லை. எனவே அவற்றில் ஒன்று தவறு என்று நிருபிக்கப்படும்போது அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கிற்கு நீதிமொழிகள் 9ம் அதிகாரம் அதிக மதிப்பை அளிக்கிறது. தன்னுடைய தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் மனிதனை அது ஞானமுள்ளவன், அல்லது ஞானி என்று அழைக்கிறது. தன்னுடைய தவறுகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது அவன் கோபமடைவதில்லை. மாறாக, தன்னுடைய தவறுகளை சரிப்படுத்திக் கொண்டு மேலும் தேர்ச்சியடைகிறான். இதனையே நாம் மேலே வாசித்தோம்.
ஆனால் பரிசாயக்காரன், அதாவது தனது தவறை உணர மனமற்றவன் கண்டிக்கப்படும் போது அவன் கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறான். இதனை வச.8 தெளிவாக்குகிறது. பரியாசக்காரனை கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான் என்று. அவன் தன்னுடைய தற்பெருமையின் காரணமாக அதற்கு செவி கொடுக்க மறுக்கிறான்.
மற்றவர்கள் நம்முடைய தவறுகளை நமக்கு எடுத்துரைக்கும்போது நாம் அவற்றிற்கு செவிகொடுப்பதன்மூலம் ஞானத்தின் பாதையைப் பின்பற்றவேண்டும். நாம் உண்மையாகவே ஞானமுள்ளவர்களாக மாறவேண்டுமென்றால் நாமும் சில நேரங்களில் முட்டாளாகச் செயற்பட்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதோ, உன்கண்ணில் உத்திரம் இருக்கையில், உன்சகோதரனை நோக்கி, நான் உன்கண்ணில் இருக்கிற துரம்பை எடுத்துப்போடட்டும் என்று சொல்வது எப்படீ? மாயக்காரனே, முன்பு உன்கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன்சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய், மத்.7:4.
இயேசுவோ இந்த உண்மையை பாமர மக்களுக்கு வலியுறுத்த ஒரு நகைச்சுவையை சத்தியத்தில் பயன்படுத்தினார். அதாவது, தன்னுடைய கண்ணில் பெரிய உத்திரம் இருக்கும் போது, தன்சகோதரனுடைய கண்ணில் இருக்கும் சிறிய துரும்பை அகற்ற முன்வரும் ஒருவனைப்போல இன்று சமயத்தலைவர்களும், அரசியல்வாதிகளும், உயர்மட்ட அல்லது உயர்ந்த எண்ணம் கொண்ட மக்களும் இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
நாம் நமது சொந்த தவறுகளைக் காண்பதில்லை. ஆனால் மற்றவர்களிலுள்ள சிறிய குறைபாடுகளைக் கண்டுபிடிக்கிறோம். நாம் இரண்டு அளவுகோல்களை, அதாவது, ஒன்று நமக்காக, மற்றொன்று பிறருக்காக வைத்திருக்கிறோம். அதேபோல நமது செயற்பாடுகளை விபரிக்க இரண்டு வௌ;வேறுபட்ட சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். மற்றவர்களிடம் – மோசமான கோபமாக – காணப்படுவது நம்மில் ”நீதியான சீற்றம்” என்றாகி விடுகிறது. மற்றவர்களிடம் காணப்படுவது ”கஞ்சத்தனம்” நம்மிலே அது ” சிக்கனம்”. இதுதான் அந்த அளவுகோலும், உண்மையும்கூட.
அதுமட்டுமல்லாமல் நமது சொந்தத் தவறுகளுக்காக மற்றவர்களையும் குற்றப் படுத்தவும் நாம் முயல்கிறோம்.
இது ஓர் கற்பனைக்கதை. ஆனால் சராசரிக் குடும்பத்தில் நடைபெறும் ஓர் உரையாடல். 20 ஆண்டுகாலமாக திருமண உறவைக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென மனைவி ” நீங்கள் துவக்கத்தில் இருந்ததுபோல அன்பாகவும் நேசத்துடனும் இப்போதெல்லாம் இருப்பதில்லை. அப்போது காரில் செல்லும்போது நாம் நெருக்கமாக அமர்ந்திருப்போம். இப்பொழுதெல்லாம் நீங்கள் என்னை விட்டு அதிக தூரம் விலகியிருக்கிறீர்கள்” என கூறினாள். அதற்கு கணவன், ”என் அன்பே, நான் காரோட்டும் போது எந்த இடத்தில் அமர்ந்திருப்பேனோ அதே இடத்தில்தான் இப்பொதும் இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
குறைகூறும் மனோபாவத்தைக் குறித்து நாம் எச்சரிக்கையோடு இருப்போமாக. அது நாம் நமது சொந்தத் தவறுகளைக் காணமுடியாமல் செய்வதோடுகூட, அதை நம்மீதே திருப்பும் அபாயமும் உண்டு.
ஒருசில நிமிடங்கள் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து, எம்முடைய வாழ்வை சீராக்குவோம்.
நல்ல மனதோடு வாஞ்ச்சித்த மக்களுக்கு தேவன் அருள் புரிவாராக.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர் வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark