கரோனா 2-வது அலை தேசத்தையே உலுக்கியிருக்கிறது. கரோனா முதல் அலையில் வெற்றிகரமாக மீண்டதைப் போல், விரைவில் இந்தச் சிக்கலில் இருந்தும் மீள்வோம் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 76-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நம்முடைய பொறுமையை சோதித்து, வலியை தாங்குவோமா என்று கரோனா வைரஸ் நம்மை சோதிக்கும் இந்த கடினமான நேரத்தில் நான் உங்களிடம் பேசுகிறேன். நம்முடைய அன்புக்குரியவர்கள் பலரும் இந்த கரோனா அலையில் உலகில் இல்லை. கரோனா முதலாவது அலையை வெற்றிகரமாக நாம் கையாண்டு நம்முடைய நம்பி்க்கை உயர்வாக இருந்த நிலையில் 2-வது அலை நம்தேசத்தை உலுக்கிவிட்டது.
கரோனா 2-வது அலையை எதிர்கொள்ள நான் மருத்துவ வல்லுநர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்கள், வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறேன்.நம்முடைய சுகாதாரப் பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து கரோனாவுக்கு எதிரானப் போரில் பங்கேற்று வருகிறார்கள்.கடந்த ஆண்டு கரோனாவைக் கையாண்டபோது பலவிதமான அனுபவங்களைப் பெற்றுள்ளார்கள். விரைவில் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வோம் என நம்பி்க்கை தெரிவிக்கிறார்கள். இந்த பெருந்தொற்றை வெல்வதுதான் நமது குறிக்கோள்.
தடுப்பூசி குறித்து தவறாக செய்யப்படும் பிரச்சாரத்தில் மக்கள் சிக்கிவிடக்கூடாது, வதந்திகளை நம்பிவிடக்கூடாது எனக் கேட்கிறேன். மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கிவருவதை நீங்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இலவசமாக பயன்பெறலாம்.மே 1-ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
கரோனா வைரஸ் குறித்து அனைத்து தகவல்களையும் நம்பகத்தன்மையான தளங்கள், மனிதர்களிடம் இருந்து பெற வேண்டும்.மருத்துவர்களிடம் தொலைப்பேசியில் அறிவுரை கேளுங்கள். பல மருத்துவர்கள் பொறுப்புணர்வுடன் சமூக வலைதளத்தில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு செய்கிறார்கள், பலருக்கும் ஆலோசனை வழங்குகிறார்கள். இது உண்மையில் வரவேற்கக்கூடியது.மத்திய அரசின் இலவசத் தடுப்பூசி போடும் திட்டம் எதி்ர்காலத்திலும் நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கு வழங்க மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புனிதமாதத்தில் புனித ரமலான் பண்டிகை, புத்த பூர்ணிமா, குருதேஜ் பகதூரின் 400-வது பிறந்தநாள் ஆகியவை வருகிறது.அனைவருக்கும் வாழ்த்துகள்.
இ்ந்த புனிதமான நாட்கள் நமக்கு ஒரு பாடத்தைத்தான் கற்பிக்கின்றன, அதாவது உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள்.நாம் நேர்மையாக இருந்தால்,நிச்சயம் இந்த கரோனா பிரச்சினையிலிருந்து விரைவில் வெளியே வருவோம்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்