நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மே 1-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பு விவகாரத்தில் மத்திய அரசின் மேலாண்மை சரியாக இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார். ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;- கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் விவாதித்தது போதும். நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பாஜகவின் நிர்வாக முறைக்கு இந்தியாவை பலிகடா ஆக்காதீர்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக தடுப்பூசிகளின் விலையை நிறுவனங்களே நிர்ணையித்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனபடி, சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.400 விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது.
அதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்ஸின் தடுப்பூசியை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ.600 விலையிலும், தனியாருக்கு ரூ.1200 விலையிலும் வழங்குவதாக அறிவித்தது. ஒரே தடுப்பூசி வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்தன.