ரிஷாத் பதியுதீன் எம்.பி மற்றும் அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் அல்ல. சட்டம் தன் கடமையைச் செய்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும், அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கைது நடவடிக்கைக்கும் ,அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் அல்ல. எதிர்க்கட்சியினரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது தொடர்பில் அரசு மீது வீண்பழி சுமத்துகின்றனர். சட்டம் தன் கடமையைச் செய்யும், இதில் அரசின் தலையீடு இருக்கவேமாட்டாது என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்ற பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் சட்ட நடவடிக்கைகளூடாக நிறைவேறியே தீரும். இதில் அரசு உறுதியாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.