இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். இதில் நடிப்பதற்காக நடிகர் கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்த படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். இதனால் படப்பிடிப்பு பல நாட்கள் தடைப்பட்டது. இதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் இறங்கியதாலும், கொரோனா பரவல் காரணமாகவும் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்குவதற்கும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவதற்கும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் இந்தியன் -2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இந்தியன்-2 திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் பிற படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பினரும் கலந்து பேசி தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணையின் போது இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவித்தார். மேலும் ஷங்கர் தரப்பு வாதத்தை விசாரிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.