நாட்டில் ஆக்சிஜன், கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் 2-வது அலை தலைவிரித்தாடி வருவதால், நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசித் தட்டுப்பாடும், ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் டெல்லியில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் நாட்டில் ஆக்சிஜனுக்கோ அல்லது தடுப்பூசிக்கோ தட்டுப்பாடு ஏதும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதேபோல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மாநிலத்தில் ஆக்சிஜனுக்கும், தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இருவரின் பேச்சையும் குறிப்பிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் காட்டமாக விமர்சித்துள்ளார். அதில், “நாட்டில் கரோனா தடுப்பூசிக்கும், ரெம்டெசிவிர் மருந்துக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியுள்ளது எனக்கு வியப்பாக இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்திலும் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏதுமில்லை என முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்ததும் எனக்கு வியப்பாக இருந்தது.
அப்படியென்றால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பது குறித்தும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காட்சிகள், நாளேடுகள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் பொய்யானவையா?, போலியானவையா?.
மருத்துவர்கள் அனைவரும் பொய் உரைக்கிறார்களா?, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொய் சொல்கிறார்களா? மருத்துவமனைகளின் நிலவரம் குறித்து வெளிவரும் காணொலிக் காட்சிகளும், புகைப்படங்களும் போலியானவையா? மக்கள் அனைவரையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய வேண்டும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.