அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற முறையில் உயர்வடைந்துள்ளதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டு மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.நாளாந்த நுகர்வுத் தேவைகளுக்கு ஏற்றால் போல் நாளாந்த வருமானங்கள் இல்லாமையும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிய வண்ணம்முள்ளனர்.
குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை.
சீனி மோசடியை ஏற்படுத்தியவர்களே தேங்காய் எண்ணெய் மேசடியையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது. இதையும் தாண்டி மக்களை சூட்சுமமாக ஏமாற்றும் புதிய மோசடியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஏற்படுத்தப்பட்ட கேஸ் விலைக் குறைப்பு பாரிய ஏமாற்றும் வித்தையாகும். கேஸ் 12.5கிலோ எடை கொண்ட கொள்ளலவிலிருந்து 03கிலோ எடையைக் குறைத்து விட்டு 100ரூபா விலைக் குறைப்பாக காட்டியுள்ளனர்.
உண்மையில் எடை குறைப்பால் 400அல்லது 500ரூபாவை மக்கள் மேலதிகமாக செலுத்துகின்றனர். அரசாங்கத்தோடு இருக்கும் சில வியாபார நண்பர்கள் குழுவே இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளன.