இந்தியாவுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் உதவி செய்த சிங்கப்பூர் அரசுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
நாட்டில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. முதல் அலையில் அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்தன. இதனால், அந்த நாடுகளுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது. இதற்கு ஐ.நா.சபையும் பாராட்டு தெரிவித்து இருந்தது.
நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் பாதிப்பு சரிவை நோக்கி சென்றது ஆறுதல் அளித்தது. ஆனால், உலக அளவில் மக்கள் தொகையில் 2வது இடத்திலுள்ள இந்தியாவில் பாதிப்பின் தீவிரம் நாள்தோறும் உச்சமடைந்து வருகிறது. இதனால், பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
நாட்டில், 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றுக்கு நேற்று ஆளாகி இருந்தனர். 3 ஆயிரத்து 293 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்பொழுது, இது புதிய உச்சம் ஆகும்.
தொடர்ந்து உலக அளவில் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்து இருந்தன.
இதேபோன்று சிங்கப்பூர் அரசும் இந்தியாவுக்கு உதவ தயார் என அறிவித்து உள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்பாழுது, சிங்கப்பூரின் பாதுகாப்பு துறை மந்திரி இங் எங் ஹென் உடன் தொடர்பு கொண்டு பேசினேன். இதில், கொரோனா பெருந்தொற்றின் 2வது அலைக்கு எதிரான போரில் வாய்ப்புகளை வலுப்படுத்துவது பற்றி இருவரும் பேசினோம்.
இந்தியாவில் தீவிரமடைந்துள்ள 2வது அலையால் ஏற்பட்டு உள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆதரவுடன் எங்களுக்கு உதவி செய்து வரும் சிங்கப்பூர் அரசின் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டேன் என கூறியுள்ளார்.