கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக செம்மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் உலக தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம். “நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற எழுச்சிகர செய்தி இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் அடையாளம். நல்ல பரிணாமம் (Evolution). நல்ல பரிமாணம்.
“நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற அரசியல், சமூக, கலாச்சார செய்தியையும் இந்த தமிழ் இருக்கை அறிவிக்கின்றதாக நான் நம்புகிறேன்.
டொரோன்டோ மத்திய எம்.பி மார்சி இயன், இதுபற்றி கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றி கனடாவில் வாழும் மூன்று இலட்சம் புலம் பெயர் தமிழர்களையும், இதற்காக முன்னின்று உழைத்த கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளையும் பாராட்டியுள்ளார்.
அதேபோல், காலமறிந்து இந்திய ரூபாயில் ஒரு கோடி நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின், அ.இ.அ.தி.மு.க அரசுக்கும், இந்திய ரூபாயில் பத்து இலட்சம் நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி தி.மு.கவுக்கும், இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
இந்த காரியத்தை கருப்பொருளாக, முன்வைத்து, வளர்த்தெடுத்து, நிதி சேகரித்து, சாத்தியமாக்கியுள்ள அனைத்து புலம் பெயர் தமிழ் நெஞ்சங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், ஒட்டுமொத்த கனடிய தமிழர்களுக்கும் எனது பாராட்டுகள்.