கொரோனா சினிமா தொழிலை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்களை மூடி உள்ளதால் திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன.
இந்த சிக்கலை சாதகமாக்கிய ஓ.டி.டி. தளங்கள் ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பெண்குயின் உள்ளிட்ட பல படங்களை கைப்பற்றி ஓ.டி.டி.யில் வெளியிட்டன.
தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தையும், ஓ.டி.டி. தளம் வாங்கி ஜூன் மாதம் வெளியிடுகிறது. விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், திரிஷா நடித்துள்ள ராங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
இந்த நிலையில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்துக்கும் ஓ.டி.டி. தளங்கள் விலை பேசுவதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது. இந்த வருடம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருவதாக இருந்த வலிமை படம் கொரோனாவால் தாமதமாகி உள்ளது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. தீபாவளிக்கு படத்தை திரையிட படக்குழுவினர் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில்தான் ஓ.டி.டி. தளங்கள் வலிமையை வாங்க போட்டி போடுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் அஜித்குமார், தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் படத்தை தியேட்டரில் திரையிடும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்க ஓ.டி.டி. தளங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்து படம் தியேட்டரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.