அகவை 50ஐ நிறைவு செய்யும் ‘தல’ அஜித் குமாரின் வாழ்வின் அசத்தல் 50 தருணங்களை நினைவுகூர்வோம்.
1. 1971 மே 1 – ஹைதரபாத்தில் சுப்பிரமணியம்- மோஹினி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
2. 1990 ஏப்ரல் 13 –‘என் வீடு என் கணவர்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ஒரு பாடலில் பள்ளி மாணவராக தலைகாட்டியிருப்பார் அஜித். இதுவே அவர் திரையில் தோன்றிய முதல் திரைப்படம்.
3. 1993 ஜூன் 4 – அஜித் நாயகனாக நடித்த ‘அமராவதி’ வெளியானது. இதற்கு முன்பே ‘பிரேம புஸ்தகம்’ என்னும் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானாலும் அது தாமதமாகவே வெளியானது.
4. 1993 ஜூலை 16 – அஜித் நடித்த ஒரே நேரடி தெலுங்குப் படமான ‘பிரேம புஸ்தகம்’ வெளியானது.
5. 1995 ஆகஸ்ட் 5 – அஜித் தன்னுடைய சக போட்டியாளர் விஜய்யுடன் இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘ராஜாவின் பார்வையிலே’ வெளியானது.
6. 1995 செப்டம்பர் 8 – அஜித்தின் முதல் வெற்றிப் படம் ‘ஆசை’ வெளியானது. மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய படம் இது. அஜித் இரண்டு பெரும் ஆளுமைகளுடன் இணைந்த முதல் படம் என்கிற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. விமர்சனரீதியாகவும் பாராட்டப்பட்ட படம்.
7. 1996 ஜூலை 12 – அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ வெளியானது. வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படம் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் ஐந்து பிரிவுகளில் தமிழக அரசின் விருதுகளையும் வென்றது. அஜித்தின் திரைவாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று.
8. 1997 மே 23 –அஜித்-விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம்’ வெளியானது. அஜித்தின் தொடக்கக்கால படங்களில் அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம். பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனின் ஏபிசி கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்த ஒரே தமிழ்ப் படமும் இதுவே. ஜேடி-ஜெர்ரி இயக்க கார்த்திக் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடியிருந்தார்.
9. 1999 ஏப்ரல் 30 – ‘வாலி’ வெளியானது. அஜித்தின் முதல் இரட்டை வேடப் படம். அவர் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த முதல் படம்.
10. 1999 ஜூன் – ‘அமர்க்களம்’ படப்பிடிப்புத் தளத்தில் உடன் நடித்த ஷாலினியிடம் அஜித் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.
11. 1999 ஆகஸ்ட் 13 – அஜித்தின் 25ஆம் திரைப்படமான ’அமர்க்களம்’ வெளியானது.
12. 1999 – ‘வாலி’ படத்துக்காக ‘தினகரன் சினிமா விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இதுவே அஜித் வென்ற முதல் விருது.
13. 2000 ஏப்ரல் – சென்னையில் அஜித்-ஷாலினி திருமணம் நடைபெற்றது.
14. 2000 – ‘வாலி’, ‘அமர்க்களம்’ படங்களில் நடித்ததற்காக சினிமா எக்ஸ்பிரஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் அஜித்.
15. 2000 – ‘வாலி’ படத்துக்காக ஃபிலிம்ஃபேர் சவுத்தின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
16. 2000 – கலைத் துறையில் சாதித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது அஜித்துக்கு அளிக்கப்பட்டது.
17. 2001 ஜனவரி 14 – ‘தீனா’ படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதோடு அஜித்துக்கு நிரந்தரமாக நிலைத்துவிட்ட செல்லப் பெயரான ‘தல’ இந்தப் படத்தின் மூலம்தான் கிடைத்தது. சென்னை பேச்சு வழக்கில் தலைவன் என்பதன் சுருக்கமே தல. இன்றுவரை ரசிகர்கள் அஜித்தை ‘தல’ என்றே அழைக்கின்றனர்.
18. 2001 ஜூன் 8 – சரவண சுப்பையாவின் ‘சிட்டிசன்’ வெளியானது. இந்தப் படத்தில் மிகவும் பெருத்த உடல் கொண்ட அரசியல்வாதி, ஒல்லியான அரசு அதிகாரி, முகம் சிதைந்த முதியவர், மீனவர், காவல்துறை அதிகாரி என ஒன்பது வித்தியாசமான கெட்டப்புகளில் இரட்டை வேடங்களில் தோன்றினார் அஜித். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்குப் பிறகு ஒரே படத்தில் இவ்வளவு கெட்டப்புகளில் நடித்த நாயக நடிகர் அஜித்.
19. 2001 அக்டோபர் 26 – சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஷாரூக்கான் நாயகனாக நடித்த ‘சாம்ராட் அசோகா’ வெளியானது. அசோக மன்னரின் வாழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்த வரலாற்றுப் புனைவு திரைப்படத்தில் அஜித் வில்லனாக நடித்தார். இதன் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். அஜித் நடித்துள்ள ஒரே நேரடி இந்திப் படமும் இதுதான்.
20. 2001 – ‘முகவரி’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை இரண்டாம் முறையாக வென்றார்.
21. 2001 – ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறப்பு விருதை வென்றார்.
22. 2001 – ’அசோகா’ இந்திப் படத்துக்காக சிறந்த வில்லன் நடிகருக்கான ஜீ சினி விருதை வென்றார்.
23. 2002 – ‘சிட்டிசன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை தொடர்ந்து மூன்றாம் முறையாக வென்றார்.
24. 2002 – ‘வில்லன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தினகரன் சினிமா விருதை வென்றார்.
25. 2002 – ஃபார்முலா மாருதி கார் பந்தயத்தில் பங்கேற்றார்.26. 2003 – ஃபார்முலா ஆசியா பிஎம்டபுள்யூ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார். சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்ற மிகச் சில இந்தியர்களில் ஒருவரானார்.
27. 2003 – ‘வில்லன்’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் சவுத் விருதை வென்றார் அஜித்.
28. 2004 நவம்பர் 12 – சரண் இயக்கிய ‘அட்டகாசம்’ வெளியானது. இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இது 50ஆம் இரட்டை வேடப் படம் என்னும் தகவலை ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் பதிவு செய்தார்.
29. 2006 அக்டோபர் 20 – அஜித் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த ‘வரலாறு’ நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. தொடர் தோல்விகளாலும் நீண்ட இடைவெளிகளாலும் தொய்வுற்றிருந்த அஜித்தின் திரை வாழ்க்கை புத்தெழுச்சி பெற்றது.
30. 2006 – ’வரலாறு’ படத்துக்காக தமிழக அரசின் சிறப்பு விருதை வென்றார்.
31. 2006 – சினிமாத் துறைக்குச் சிறப்பாகப் பங்களித்தவர்களை கெளரவிப்பதற்காக தமிழக அரசு வழங்கும் விருதுகளில் ஒன்றான எம்ஜிஆர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டது.
32. 2007 – ‘வரலாறு’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் சவுத் விருதை வென்றார்.
33. 2007 டிசம்பர் 14 – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘பில்லா’ (1980)வின் மறு ஆக்கத்தில் அஜித் நடித்தார். உள்ளடக்கத்தைத் தக்கவைத்து உருவாக்கத்தில் காலமாற்றத்துக்கேற்ற அதிநவீனத்தன்மையை இழைத்து உருவாக்கப்பட்டிருந்த ‘பில்லா’ (2007) மிகப் பெரிய வெற்றி பெற்றது. அஜித்தின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
34. 2008 ஜனவரி 3 – அஜித்-ஷாலினி இணையருக்கு மகள் பிறந்தார். தங்கள் முதல் குழந்தைக்கு அனோஷ்கா என்று பெயர் வைத்தனர்.
35. 2010 பிப்ரவரி 5 – சரண் இயக்கிய ’அசல்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் முதல் முறையாக சரணுடன் இணைந்து அஜித் திரைக்கதை எழுதியிருந்தார்.36. 2010 பிப்ரவரி – தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்குத் தமிழ்த் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாக முதல்வர் முன்னிலையில் மேடையில் பேசினார் அஜித். இந்தத் துணிச்சலான பேச்சுக்குப் பரவலான பாராட்டுகள் கிடைத்தன. ரஜினிகாந்த் அதே மேடையில் எழுந்து நின்று கைதட்டி தன் பாராட்டை வெளிப்படுத்தினார். இதையொட்டி சில சர்ச்சைகளும் எழுந்தன.
37. 2010 – எஃப்.ஐ.ஏ ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார்.
38. 2011 ஏப்ரல் – இந்திய வெகுஜன சினிமாவில் வேறெந்த நடிகரும் செய்திராத விஷயத்தைச் செய்தார் அஜித். தன்னுடைய அதிகாரபூர்வ ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைப்பதாக அறிவித்தார். ரசிகர் மன்றங்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவதாலும் ரசிகர்களின் தனிப்பட்ட நலன் கருதியும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
39. 2011 ஆகஸ்ட் 31 – அஜித்தின் 50ஆம் திரைப்படமான ‘மங்காத்தா’ வெளியானது. அஜித் முழுமையான எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட நாயகனாக நடித்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திலிருந்து அஜித் தன் அசலான கறுப்பு-வெள்ளை தலைமுடியுடன் நடிக்கத் தொடங்கினார். தமிழகத்தின் ‘ஜார்ஜ் க்ளூனி’ என்று புகழப்பட்டார்.
40. 2012 – ‘மங்காத்தா’ படத்துக்காக சென்னை டைம்ஸ், செளத் இந்தியன் இண்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ், விஜய் அவர்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
41. 2012 ஜூலை 13 – 2007இல் வெளியான ‘பில்லா’ படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான டேவிட் பில்லாவின் முன் கதையை வைத்து எடுக்கப்பட்ட ‘பில்லா 2’ இந்திய சினிமாவின் முதல் அசலான ப்ரீக்வல் படமாக வெளியானது. பொதுவாக ஒரு படத்தின் கதையை முன்னோக்கிச் செலுத்தும் அடுத்த பாகங்களாக சீக்வல்கள் வெளியானபின் முந்தைய பாகங்கள் ப்ரீக்வல் (prequel) என்று குறிப்பிடப்படும். ஆனால் ஏற்கெனவே வெளியான படத்தின் முன்கதையை வைத்து உருவாக்கப்பட்ட ‘பில்லா 2’ படத்தையே அசலான அர்த்தத்தில் ப்ரீக்வல் என்று வகைப்படுத்த முடியும்.
42. 2012 அக்டோபர் 5 – 1980களின் முன்னணி நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த ‘இங்லிஷ் விங்லிஷ்’ திரைப்படத்தில் ஒரு ரசிக்கத்தக்க கெளரவ வேடத்தில் நடித்திருந்தார் அஜித். இந்தி பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்திருந்த வேடத்தில் தமிழில் அஜித் நடித்தார்.43. 2013 – ‘பில்லா 2’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருதை வென்றார் அஜித்.
44. 2014 ஜனவரி 10 – பாரம்பரியம் மிக்க தயாரிப்பு நிறுவனமான விஜயா ப்ரொடக்சஷன்ஸ் தயாரித்த ‘வீரம்’ படம் வெளியானது. விஜயா ப்ரொடக்சன்ஸ் நிறுவனர் பி.நாகி ரெட்டியின் நூற்றாண்டு நிறைவடைந்துவிட்டதை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்து மனிதனாக படம் முழுக்க வெள்ளை வேட்டி-சட்டையுடன் தோன்றினார். வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
45. 2015 மார்ச் 2 – அஜித்- ஷாலினி இணையருக்கு மகன் பிறந்தார். ஆத்விக் என்று பெயர் சூட்டினர்.
46. 2015 பிப்ரவரி 6 – கெளதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ வெளியானது. பல முறை தட்டிப்போன ரசிகர்களால் பெரிதும் ஏதிபார்க்கப்பட்ட அஜித்-கெளதம் இணைப்பு சாத்தியமான படம் இது. ‘காக்க காக்க’ படத்தின் கதையை முதலில் அஜித்துக்குத்தான் சொல்லியிருந்தார் கெளதம். இந்தப் படமும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதைதான். அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக கிளாஸ்+மாஸாக காட்டிய படமாக ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.
47. 2018 – விமான வடிவமைப்பில் (ஏரோமாடலிங்) அஜித்துக்குத் தனி ஆர்வம் உண்டு. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி மையமான எம்.ஐ.டியின் ஏரோமாடலிங் திட்டமான ‘மிஷண் துரோணா’வில் அஜித் தலைமை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் ஆளில்லா விமானங்களுக்கான பொறியியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.
48. 2019 ஜனவரி 10 – அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் வெளியாகி மிகப் பெரிய வசூலைக் குவித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தோடு ஒரே நாளில் வெளியானாலும் இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்தன.
49. 2019 ஆகஸ்ட் 8 – விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பாலிவுட் படமான ‘பிங்க்’ தமிழில் ’நேர்கொண்ட பார்வை’ என்னும் தலைப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது. இந்தியில் அமிதாப் ஏற்றிருந்த வழக்கறிஞர் வேடத்தில் அஜித் நடித்திருந்தார். நவீனப் பெண்கள் குறித்த ஆண்மையப் பார்வை சார்ந்த முன்முடிவுகளைக் கேள்விக்குட்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போன்ற ஒரு நட்சத்திர நடிகர் நடித்தது முன்னோடி முயற்சி என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. அஜித்தின் திரை வாழ்வில் விமர்சனரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட படமாக ‘நேர்கொண்ட பார்வை’ அமைந்தது.
50. 2021 மார்ச் 7 – 46ஆம் தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைஃபில்ஸ் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித், தங்கப் பதக்கம் உள்பட ஆறு பதக்கங்களை வென்றார்.
தொகுப்பு: ச.கோபாலகிருஷ்ணன்