தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் துணை சபாநாயகராக வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நாளை முறைப்படி பதவியேற்கவுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி கவர்னர் மாளிகையில் பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் தமிழகத்தின் 16வது கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின், அப்பாவு உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தனர்.இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டசபை கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர்.
முன்னதாக சட்டசபை தலைவர் பதவிக்கு ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு வேட்புமனு தாக்கல் செய்தார், துணைத்தலைவர் பதவிக்கு திமுக எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக் கூறி எம்.எல்.ஏ பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு கட்சிகளின் சட்டசபை தலைவர்கள் பதவி ஏற்றுகொண்டனர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கடவுள் அறிய” எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதேபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற கட்சி தலைவர்கள் பதவியேற்று கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அகர வரிசைப்படி, மற்ற உறுப்பினர்களும் வரிசையாக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.