நிறவெறி சர்ச்சை காரணமாக ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தான் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது தற்போது சந்தித்து வரும் சர்ச்சை என்ன?
ஹாலிவுட் பாரின் பிரஸ் அஸோசியேஷன் என்கிற அமைப்பு ஆண்டுதோறும் திரை மற்றும் சின்னத்திரையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதுகளை வழங்கி வருகிறது. 1944-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படுகிறது. 2009-ம் ஆண்டில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கோல்டன் குளோப்’ விருதை பெற்றுள்ளார்.
அந்த அமைப்பில் பத்திரிகை மற்றும் புகைப்படக் கலைஞர்கள் 90 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக இந்த அமைப்பில் கறுப்பினத்தைச் சேர்ந்த எவரையும் தலைமை நிர்வாகிகள் அனுமதிப்பதில்லை என அமைப்பின் உறுப்பினர்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இது ஹாலிவுட் கலைஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது பிரபல நடிகர் டாம் குரூஸ் தான் பெற்ற மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் திருப்பி அளித்துள்ளார்.
மேலும், உறுப்பினர் குழுவில் உரிய மாற்றங்களை செய்யாவிட்டால் 2022-ம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்யப்போவதில்லை என என்.பி.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறவெறி சர்ச்சை பூதாகரமாகி வரும் நிலையில், ஆகஸ்டு மாதத்தில் எல்லா இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் குழுவில் சேர்க்கப்படுவர் என விருது அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.