இந்தியாவில் 3,43,144 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,43,144 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,43,144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது.தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,04,893 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கரோனாவிலிருந்து 3,44,776 பேர் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,62,317 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 17,92,98,584 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31,13,24,100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18,75,515 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
———-
கரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து சந்தையில் கிடைக்கும் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். மக்களை நோய்த் தொற்றுக்கு ஆளாவதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.
ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட் இரு தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.
மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்து, அந்தத் தடுப்பூசிகளும் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. ஆனால், மக்களுக்கு இன்னும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்படவில்லை, சந்தையிலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:’இந்தியாவுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் வந்துவிட்டன. அடுத்த வாரத்திலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி சந்தையில் கிடைக்கும் என நம்புகிறேன். ரஷ்யாவிலிருந்து மிகக்குறைந்த அளவில்தான் வந்துள்ளது.
இருப்பினும் அடுத்த வாரத்திலிருந்து கிடைக்கும். ஆனால், ஜூலை மாதத்திலிருந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கும். அதன்பின் சப்ளையில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 15.6 கோடி தடுப்பூசி தயாரிக்க முடியும்.
இந்தியாவில் இந்தியர்களுக்காக ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 216 கோடி தடுப்பூசிகளைத் தயாரிக்க இருக்கிறோம். அடுத்து வரும் காலங்களில் தடுப்பூசிக்கு எந்தவிதமான தட்டுப்பாடும் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.
எப்டிஏ, உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கிய எந்தத் தடுப்பூசியும் இந்தியாவுக்கு வந்துவிடும். இறக்குமதி அனுமதியும் விரைவாக வழங்கப்படும், இப்போது வரை தடுப்பூசி இறக்குமதிக்கு எந்த விண்ணப்பமும் காத்திருப்பில் இல்லை.கோவாக்சின் தடுப்பூசி ஃபார்முலாவை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முன்வந்துள்ளது. நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது. கோவாக்சின் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உற்பத்தியை அதிகரிக்கும்”.
இவ்வாறு பால் தெரிவித்தார்.

Related posts