ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள். அன்றைய தினம் றமழான் மாத நோன்பை நிறைவு செய்து மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளே ஈகைத் திருநாள். இரண்டு பெருநாட்களில் ஒன்று ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் மற்றது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள். ஹிஜ்ரி இரண்டாம் வருடம் நோன்புப் பெருநாள் முதன் முதலில் கொண்டாடப்பட்டது. இதே ஆண்டில்தான் நோன்பும் விதியாக்கப்பட்டது.
றமழானின் இறுதித் தினம் சூரியன் மறைந்தவுடன் பெருநாள் தினம் ஆரம்பித்து அடுத்த நாள் சூரியன் மறைவதோடு பெருநாள் தினம் முடிவடைகின்றது. அபூதாவூதிலும் திர்மிதியிலும் இடம்பெற்றுள்ள ஒரு செய்தி இப்படிக் கூறுகின்றது, ‘நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டபொழுது அங்குள்ள மக்கள் வருடத்தில் இரண்டு நாட்களை விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை நோக்கி, நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அந்த இரண்டு நாட்களுக்குப் பதிலாக வேறு இரண்டு நாட்களைத் தந்திருக்கின்றான். அவை நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும ஆகும் என்று கூறி அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த இரண்டு நாட்களையும் தவிர்த்தார்கள்.
ஈதுல் பித்ர் பெருநாளை மனமகிழ்வுடன் கொண்டாடும் நாம் றமழான் மாதத்திலே கழிந்துவிட்ட நாட்களை ஒரு முறை மீட்டிப் பார்ப்பது பொருத்தமாகும். றமழானை நாம் எப்படிக் கழித்தோம்? நற்காரியங்களில் ஈடுபட்டோமா? தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றினோமா? தராவீஹ் தொழுதோமா? இரவு வணக்கங்களில் ஈடுபட்டோமா? ஏழைகள் அனாதைகளுக்கு உதவினோமா? குர்ஆன் திலாவத் செய்தோமா? உறவினர்கள் அடுத்த வீட்டாரின் உரிமைகள் கடமைகளைச் செய்தோமா? நடுநிசியில் எழுந்திருந்து அழுது தொழுது அல்லாஹ்விடம் இறைஞ்சினோமா? எமது பாவங்களை நினைத்து மனமுறுகி அல்லாஹ்விடம் பிராத்தித்தோமா? முனாஜாத்து செய்தோமா? இக்கேள்விகளுக்குச் சாதகமாக பதில் கிடைக்குமேயானால் றமழானின் பாக்கியங்களை பூரணமாக அடைந்த பாக்கியவான்களாவோம்.
பெறுமதிமிக்க றமழான் காலத்தை வீணே கழித்தவர்கள், அசட்டை செய்தவர்கள், பொடுபோக்காக நடந்துகொண்டவர்கள், பெரும் நஷ்டத்துக்கும் கைசேதத்துக்கும் ஆளாகிவிட்டார்கள். காலமெல்லாம் அழுது தீர்த்தாலும் சென்ற பாக்கியங்களை அடைந்துகொள்ள முடியாது. இப்படியானவர்கள் அடுத்து வரும் றமழானைப் பயன்படுத்துவோம் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் கூறிக்கொண்டாலும் அடுத்து றமழான் வரை உயிர்வாழ்வோம் என்பதில் என்ன உத்தரவாதமிருக்கின்றது?
பெருநாள் மகிழ்ச்சி பொங்கும் திருநாள் இனபந்துக்களையும் இரத்த உறவுகளையும் சேர்த்து நடக்க வழிகோலும் இனிய நாள். பிரிந்த உறவுகளை சேர்த்து நடந்து உறவை மீட்டிக் கொள்ள சந்தர்ப்பத்தை வழங்கும் நந்நாள். முஸ்லிம் சமூகம் ஒன்றாய்க் கூடி உறவாடி சகோதர உறவை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கும் நாள். கடமையான ஸக்காத், தானதர்மங்கள், ஸகாத்துல் பித்ரா போன்ற உதவிகளை வறியவர்களுக்கு இன்முகத்தோடு வழங்கி அவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் சந்தோசமும் மலரும் நாள். ஒரு மாத காலம் நோன்பிருந்த நன்மைகள் பல புரிந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் மகிழ்ச்சி பொங்கும் நாள். சின்னஞ்சிறார்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கி அவர்களை மகிழ்வூட்டும் நாள். குளித்துப் புத்தாடைகள் பூண்டு மனம் பூசி பள்ளிவாசல் சென்று முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமையை பறைசாற்றும் நந்நாள்.
இன்றைய மகிழ்ச்சி பொங்கும் இந்நாளில் பிறமுஸ்லிம் சகோதரர்களைச் சந்தித்து முஸாபஹா, முஆனக்கா செய்து பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வது இஸ்லாம் விரும்பும் நற்காரியமாகும். சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீடுகளுக்குச் சென்று பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதும் சுகம் விசாரித்துக் கொள்வதும் இஸ்லாம் விரும்பும் நற்காரியங்களாகும். பக்கத்திலே அந்நிய மதச் சகோதரர்கள் இருப்பார்கள். அவர்களோடும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு வீட்டில் செய்யும் உணவுப் பண்டங்களையும் இனிப்புப் பதார்த்தங்களையும் அன்பளிப்புச் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வதும் விரும்பத்தக்க காரியங்களாகும்.
உங்கள் வீடுகளிலே உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புத்தாடை பூண்டு நறுமணம் பூசி மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள். இதேவேளை தாய், தந்தையர்களை இழந்த அனாதைக் குழந்தைகள் சிறுவர் சிறுமியர் பழைய கந்தல் ஆடைகளை அணிந்து வறுமையில் வாழ்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள். மற்றப் பிள்ளைகளைப் பார்த்துக் கவலைப் பட்டுக்கொண்டிருப்பார்கள். இந்நந்நாளிலே இவர்கள் பக்கமும் ஒரு முறை திரும்பிப் பாருங்கள். முடியுமான உதவிகளை அவர்களுக்கும் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்ளுங்கள்.
மூன்று வருடங்களாகப் புனித றமழானைத் திருப்தியாக அனுஷ்டிக்க முடியாமல் பல இன்னல்களைச் சந்தித்தோம். ஒரு வருடம் பயங்கரவாதி ஒருவனின் ஈவிரக்கமற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலினால் நாடே அதிர்ந்தது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒருவனால் இது நடந்ததனால் இந்த நாட்டிலே வாழும் சிறுபான்மையினராகிய நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம். அவ்வருடம் சுதந்திரமாக நோன்பு பிடிக்க முடியவில்லை. வணக்க வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடமுடியவில்லை. அச்சத்தோடும் பீதியோடும் அந்த றமழான் கழிந்தது. அந்த வடு இன்னும் ஆறவில்லை. அதற்கிடையில் கொரோனா எனும் அரக்கன் முழு உலகத்தையுமே கதிகலங்க வைத்துவிட்டது. சாதி, சமய வர்க்க பேதமின்றி அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடமாவது ரமழானைப் பயன்படுத்தலாம் என நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். அதற்கிடையில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மூன்றாவது அலை முழு உலகத்தையும் வீரியத்தோடு ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. எமது நாட்டையும் அது விட்டுவைக்கவில்லை. எனவே புனித நோன்பை நோற்று புண்ணியத்தைத் தாங்கி நிற்கும் நாம் இந்த ஈகைத் திருநாளிலே முழு உலக மக்களின் நல்வாழ்வுக்காகவும், நோய் நொடிகள் சோதனைகளில் இருந்து விடுதலை பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். விசேடமாக எமது தாய்த் திருநாட்டுக்காகவும் நாட்டின் சுபீட்சத்துக்காகவும் இந்நாட்டு மக்கள் அனைவரும் நோய் நொடிகளின்றி சமாதானமாகவும் சகோதர வாஞ்சையோடும் வாழ இந்நந்நாளிலே பிராத்திப்போம்.
ஷவ்வால் மாதம் மேற்கு வானிலே கண்சிமிட்டி வெளிப்பட்டவுடன் றமழான் விடைபெற்றுவிட்டது.றமழானே! நீ வந்தாய், மலர்ந்த்தாய், அமல்கள் செய்ய எமக்கு ஆர்வமூட்டினாய். இப்போது நீ போய் விட்டாய். ஒவ்வொரு வருடமும் நீ வருவாய் மலர்வாய், ஆனால் உன்னை அடுத்த வருடம் வரவேற்க நாம் உயிரோடு இருப்போமோ என்று கூற முடியாது. றமழானே! நீ ரஹ்மத்தைக் கொண்டு வந்தாய், உன்னில் அல்லாஹ் ரஹ்மத்தை வாரிச் சொறிந்தான். எமக்கு மத்தியில் அன்பை வித்திட்டாய். அன்புடன் வாழப்பயிற்சி வழங்கினாய். விடைபெறத் தயாராகி விட்டாய்.
றமழானே! உன்னில் நாம் பெற்ற பாக்கியங்கள் அளவிட முடியாதவை. ஓரு பர்ளுக்கு எழுபது பர்ளுகளின் நன்மை எமக்குக் கிடைத்தது. ஒரு ஸுன்னத்தான காரியத்துக்கும் ஒரு பர்ளின் நன்மையையும் நாம் பெற்றோம். நோன்பு நோற்றதனாலும் இரவில் விழித்திருந்து வணக்கம் புரிந்ததனாலும் எமது முன்பாவங்கள் மன்னிக்கப்பட்ட புனிதர்களானோம். புனித திருமறையை இரவு பகலாக ஓதினோம். திருமறை வசனங்கள் எமது உள்ளங்களை இளகச் செய்துவிட்டன. மறுமையில் குர்ஆனின் மன்றாட்டம் எமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாமிருந்தோம். பல சோதனைகள் இன்னல்களுக்கு மத்தியிலும் எமது இயல்புக்கு ஏற்றவாறு நோன்பையும் அனுஷ்டித்தோம்.
ஏழை எளியவர்களுக்கும் அனாதைகளுக்கும் விதவைகளுக்கும் எம்மால் இயன்ற உதவிகளைப் புரிந்தோம். நாளை மறுமையில் நோன்பின் மன்றாட்டமும், றய்யான் வாசல் வழியாக சுவர்க்கம் நுழையும் பாக்கியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாமிருக்கின்றோம். நடுநிசியிலே எழுந்து தொழுது அல்லாஹ்விடம் முனாஜாத்தும் செய்தோம். அழுது கண்களில் நீர் சிந்தி எமது பாவங்களை நினைத்து மனமுறுகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினோம்.
எமது தேவைகளை அவனிடம் முறையிட்டோம். நோய், நொடிகளை நினைத்துக் கதறினோம். எமது பெற்றோருக்காகவும் எமது செல்வக் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தித்தோம்.
எமது நாட்டையும் நாம் மறக்கவில்லை. நாட்டின் வளத்துக்கும் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அவனிடம் கையேந்தினோம்.
இந்தப் பசுமை நினைவுகளோடு, றமழானே! உன்னை நாம் வழியனுப்பி வைக்கிறோம்.பாக்கியம் மிக்க றமழானே! எமது நல்வாழ்வுக்காக மலர்ந்த றமழானே! புண்ணியம் தந்த றமழானே! எமது வாழ்வில் ஒளியேற்றிய றமழானே! உன்னோடு ஒன்றாகக் கலந்து வாழ்ந்த அந்த ஒரு மாதத்தின் பசுமை நினைவுகளோடு கவலை எமது தொண்டையை அடைக்க கண்ணீர் மல்க உன்னை வழியனுப்பி வைக்கிறோம்.
எம்.என்.எம்.இஜ்லான்
(காஸிமி)
கதீப், கொழும்பு பெரிய பள்ளிவாசல்.