முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அழிப்புக்கு மாவை கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படும் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியிலுள்ள நினைவு முற்றத்திலிருந்த நினைவுத்தூபி நேற்று அதிகாலை (13) இனந் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை ஆறு மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது.
பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாதென தடை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததோடு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.
——-

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த சின்னங்கள் சிதைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றுமுன்தினம் இரவு முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாகரீகமற்ற இந்த செயலுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்நாட்டில் தமிழினப் பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற 30 ஆண்டுக்கால போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்டன.
இதனை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் இவ்வாறு அழிக்கப்படுகின்றமை வருந்தத்தக்கது. எமது இனத்தின் உரிமைகளை அழிக்க முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்க நாம் ஒருபோதும் தயங்கமாட்டோம்.இராணுவமும், பௌத்தர்களும் நேற்று முன்தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் மீறி ஒன்றுக்கூடி பௌத்த சிலை நடுவதற்கான நடவடிக்கைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இன விடுதலைப் போரில் பலியான உறவுகளை நினைவுக்கூரும் நினைவிடங்களை அழிக்கும் செயற்பாட்டை இப்படியே விட்டுவிட முடியாது. இதற்கு அரசாங்கம் தகுந்த பதில் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related posts