முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாதென பொலிசார் நீதிமன்றில் மனு சமர்ப்பித்து பெயர் குறிப்பிடப்பட்ட தடை உத்தரவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி உள்ளிட்ட 05 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிசாரால், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க. ஜனமேஜயந், பிரதேச சபை உறுப்பினர்களான க.விஜயகுமார், ஆ.ஜோன்சன் உள்ளிட்ட 09 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் பொலிசாரால், பிரதேச சபை உறுப்பினர் இ.சத்தியசீலன் உள்ளிட்ட மூவருக்கும், மல்லாவி பொலிஸ் பிரிவில் 05 பேருக்கும், ஐயன்குளம் பொலிஸ் பிரிவில் 04 பேருக்கும், மாங்குளம் பொலிஸ் பிரிவில் 06 பேருக்கும் பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
இத் தடைஉத்தரவில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அமைக்கப்பட்ட விளக்கேற்றல் தூபியிலோ அல்லது இப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளிலோ பெயர்குறிப்பிடப்படும் நபர்களும் அவர்களது உறுப்பினர்களும்,எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பயங்கரவாதத்தை ஊக்கிவிக்கும் வகையிலோ தனிமைப்படுத்தல் நோய்த்தடுப்பு சட்டத்திற்கு முரணாகவோ நடத்தக்கூடாதென்று தடை உத்தரவை 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15ற்குரிய குற்றவியல் நடைமுறை சட்டக்கோவைப்பரிவு 106 (1)(3) பிரிவின் கீழ் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கிவைக்கும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.