புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தினம் தினம் பல உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலைக்கு திரைப்பிரபலங்களும் அதிகளவில் இறந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகர் எஸ்.பி.பி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை பலரையும் காவு வாங்கி வருகிறது. இதன்படி கே.வி.ஆனந்த், பாண்டு, பாடகர் கோமகன், நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
——
அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்தார்
பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களின் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
நடிப்பு தவிர்த்து ‘தெறி’, ‘காக்கிச் சட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.
பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு உயிரிழந்தார். சிந்துஜாவின் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.