மேற்கு வங்க மாநிலத்தில் நாரதா டேப் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 2 அமைச்சர்கள், எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் மேயரை சி.பி.ஐ. கைது செய்ததற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாரதா டேப் ஊழல் என்று கூறப்படும் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தற்போது அமைச்சர்களாக பதவியேற்றுள்ள பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.
இன்று காலையில் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு சென்ற நால்வரையும், விசாரணையின் முடிவில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. அலுவலகத்திற்கு நேரில் சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. அமைச்சர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த மம்தா பானர்ஜி, முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள் என்று அதிகாரிகளிடம் ஆவேசமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 214 இடங்களை கைப்பற்றி மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக அரியணை ஏறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டியும் மோதல்களும் அரங்கேறின. இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை சி.பி.ஐ. கைது செய்திருப்பது மேற்கு வங்க அரசியலில் மீண்டும் பரபரப்பை கூட்டியுள்ளது.