எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசுக் குடியிருப்பில் அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்ற நிலையிலே அவர் இறந்துள்ளார். கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.
கி.ரா.வின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
”நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.வை இழந்துவிட்டேன். கி.ரா.வும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய்-தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்”.இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.