தான் அன்றாடம் பசுவின் கோமியம் அருந்துவதாகப் பாஜக எம்.பியான பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார். இதன் காரணமாக தன்னை கரோனா அண்டவில்லை எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலின் மக்களவை தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் பிரக்யா தாக்கூர். பெண் துறவியான இவர் தீவிரவாத வழக்கில் சிக்கி பல ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்.
தற்போது பரவி வரும் கரோனாவின் இரண்டாவது அலையின் மீது பல்வேறு கருத்துக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இச்சூழலில் பாஜக எம்.பியான பிரக்யா தாகூரும் தன்பங்கிற்கு எனும் வகையில் ஒரு புதிய கருத்தை கூறியுள்ளார்.
இது குறித்து பாஜக எம்.பியான பிரக்யா தாக்கூர் ஒரு நிகழ்ச்சியின் மேடையில் கூறியிருப்பதாவது: கரோனாவால் பாதிக்கும் சுவாசக்குழாயை பசுவின் கோமியம் குணப்படுத்துகிறது.
இதற்காக நீங்கள் நாட்டுப் பசுவின் கோமியத்தை தினமும் அருந்த வேண்டும். நான் அன்றாடம் பசுவின் கோமியத்தை அருந்தி வருகிறேன்.
இதனால், என்னை இதுவரை கரோனா தொற்று அண்டவில்லை. எனக்கு தாங்கமுடியாத உடல்வலி ஏற்படுகிறது.
இதற்காக நான் எந்த மருந்துகளையும் எடுக்காமல் பசுவின் கோமியத்தையே அருந்தி வருகிறேன். இதனால், உடல்வலியுடன் கரோனா கூட என்னை அண்டியதில்லை.பசுவின் கோமியம் என்பது வாழ்வை அளிப்பது. இதன்மூலம், கரோனா உள்ளிட்ட எந்த வகை தொற்றும் அண்டாது. புற்றுநோயையும் இந்த கோமியம் குணப்படுத்தும்.
எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை புற்றுநோய் இருந்தது. இதை குணப்படுத்த நான் பசுவின் கோமியத்தையும் அதன் வேறு சில மருத்துவப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளத் துவங்கினேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பியான பிரக்யா கூறுவது போன்ற எந்தவிதமானவையும் நோயை குணப்படுத்தும் என மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்படவில்லை என இந்திய மருத்துவ சங்கத்தினர் ஏற்கனவே கூறியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 2020 இல் பாஜக எம்.பியான பிரக்யாவிற்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர், டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.