’மஹா’ திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் ‘மஹா’. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்தில் சிலம்பரசன் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஆனால் படம் ஆரம்பித்து பல வருடங்கள் கழித்தும் படத்தைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தின் வெளியீடு குறித்துச் சரியாகத் தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் என்று படத்தின் இயக்குநர் ஜமீல் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆனால் தயாரிப்புத் தரப்பு மீது இயக்குநர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த வழக்கில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்தாகவும் சிலர் தகவல் பகிர ஆரம்பித்தனர்.
தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள மஹா தயாரிப்புத் தரப்பு, வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை என்றும், படத்துக்கு எந்த விதமான தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.மேலும் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும், தற்போதைய பொது முடக்க காலத்தில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை, கருத்தில் கொண்டு, ’மஹா’ படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் தொடர்ந்து வழக்கு ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.