யாழ். மாவட்டத்தில் 69 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை புதன்கிழமை (மே 19) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 137 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேரும் என 137 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 38 பேருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒருவருக்கும், கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் 16 பேருக்கும் (அவர்களில் 9 பேர் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள்) வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேரும் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும், மன்னார் வைத்தியசாலையில் இருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நான்கு பேருக்கும், சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 28 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் காரைநகர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
—–
நாடு பூராகவும் இன்று இரவு 11 மணியிலிருந்து 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுலாகவுள்ளது.
இருப்பினும் , 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து 19 மணிநேரத்திற்கு பயண தடை விலகிக் கொள்ளப்படும்.
அன்றிரவு 11 மணியிலிருந்து மீண்டும் அமுலுக்கும் வரும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
இதற்கமைவாக அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வீடுகளிலிருந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இன்றிலிருந்து 24 ஆம் திகதி வரை சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டிருக்கும்.
25 ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படும். பின்னர் மீண்டும் 26 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
கொவிட் நெருக்கடிக்கு மத்தியல் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வீடுகளில் தங்கியிருக்குமாறு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வதற்கு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
—–
2021 மே மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 38 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் (20) உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1089 ஆகும்.
இறந்தவர்கள் உடுகித்த, லுனுகல, பலாங்கொட, கட்டுநாயக்க, பாந்துருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓய, பண்டார கொஸ்வத்த, பொரல்ல, பாதெனிய, தோரயாய, பொல்கஹவெல, கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதென்னவத்த, நாவலப்பிட்டி, குருநாகல், யட்டியாந்தோட்டை, பொல்கஹவெல, பெலிஹூல்ஒய, நேபட, கெக்குனுகொல்ல, நிக்கவெரட்டி, வரக்காபொல, அம்பிட்டி, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்டவர்களைக் கொண்டவர்கள்.
அவர்களில் 24 பேர் 71 வயதைக் கடந்தவர்களாவர், 10 பேர் 61 தொடக்கம் 70 வயதிற்கிடைப்பட்டவர்கள், ஒருவர் 51 தொடக்கம் 60 வயதிற்கிடைப்பட்டவர், ஒருவர் 41 தொடக்கம் 50 வயதிற்கிடைப்பட்டவர், ஏனைய இருவரும் 31 தொடக்கம் 40 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.
கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் மரணங்களுக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களாவதுடன், ஏனையோர் ஆண்களாவர்.