நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மிக மோசமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, உதவிகளும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், விழிப்புணர்வு வீடியோ ஒன்றின் மூலமாக தமிழக மக்களிடம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அந்த வீடியோவில், கொரோனாவில் இருந்து மீள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும் தான் ஒரே வழி எனக் கூறியுள்ள அவர் தானும் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுவது, அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட நமக்கு தெரிந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மறக்காமல் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பேரிடர் காலத்தில் கொரோனா பற்றிய அச்சமின்றி, தங்கள் உயிரையும், குடும்பத்தையும் மறந்து கொரோனாவிற்கு எதிராக போரிடும் முன்கள பணியாளர்களுக்கு இதுவே நாம் செய்யும் மரியாதை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.