இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 33 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (24) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,210 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 33 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,243 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் 5 பேரும், ஏப்ரல் 17 – மே 23 வரை 28 பேரும் மரணங்கள் நிகழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 24 – 05 பேர்
மே 17 – ஒருவர்
மே 19 – 03 பேர்
மே 20 – 02 பேர்
மே 21 – 04 பேர்
மே 22 – 10 பேர்
மே 23 – 08 பேர்
இவ்வாறு மரணமடைந்த 33 பேரில், 19 பேர் ஆண்கள், 14 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட 12 ஆயிரத்து 748 பேர் நேற்று வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட 636 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இதுவரை ஒரு நாளில் கைது செய்யப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையாக அது கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாத்தளை பிரதேசத்தில் 206 பேர் அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 14 முக்கிய கேந்திர பகுதிகளிலும் மேல் மாகாணத்திற்கு பிரவேசிக்கும் முக்கிய கேந்திரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது 1620 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் ட்ரோன் கெமரா மூலம் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.