யாழ். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இராணுவத்தின் மகளிர் மோட்டார் சைக்கிள் படையணியினர் நேற்று களத்தில் இறக்கப்பட்டனர்.
நாட்டில் நேற்று பயணத் தடை நீக்கப்பட்ட நிலையில் யாழ். நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமையினை தவிர்ப்பதற்காகவே இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த நடவடிக்கையானது யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ் நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
——
ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட மட்டத்தில் கோவிட்19 தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை ஊடகமுடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதை தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்திரிகையாளர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்கனவே ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் கடந்த சில தினங்களில் வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட்19 வைரஸால் ஏற்கனவே ஏராளமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தனியான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தை நிறுவுவது தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து தனியான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.