நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா கிடைத்திருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத் பகிர்ந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நீண்ட கால குடியிருமை விசாக்களுக்கு புதிய விதிமுறைகளை ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் நடைமுறைபடுத்தியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரின் சிபாரிசு இன்றியே வெளிநாட்டினர் அந்நாட்டில் தங்கி, படித்தோ, வேலை செய்தோ வாழ முடியும்.
இந்த விசாக்கள் 5 முதல் 10 வருட காலத்துக்கு வழங்கப்படும். பின் தானாக புதுப்பிக்கப்படும். சிறந்த திறமையாளர்களும், உயர்ந்த சிந்தனையாளர்களும் நாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
நடிகர் சஞ்சய் தத்துக்கு அப்படிப்பட்ட தங்க விசாவை ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தற்போது வழங்கியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சஞ்சய் தத், “ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசாவை, மேஜர் ஜெனரல் முகம்மது அல் மரீயின் முன் பெற்றது எனக்குப் பெரிய கவுரவம். இந்த கவுரத்தைத் தந்ததற்கு அவருக்கும், அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃப்ளை துபாய் நிறுவனத்தைன் முதன்மை இயக்கு அலுவலர் ஹமாத் ஓபைதல்லாவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.