சீனாவின் காலனித்துவ பொறிக்குள் இலங்கை

காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட இலங்கை, சீனாவின் கடன் காலனித்துவ பொறிக்குள் சிக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொழும்புத் துறைமுக நகருக்குள் பயன்படுத்தப்படும் நாணயம் எது? இலங்கை நாணயமா? சீனாவின் நாணயமா? இந்த நகருக்குள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடப்போவது இலங்கை பொலிஸாரா சீனா பொலிஸாரா?.

நீண்டக் காலமாக தமிழர்கள் இழந்த இறைமைக்காகப் போராடி வருகிறார்கள். தமிழர்களோடு இறைமைய பகிர்ந்து வாழ விரும்பாத சிங்களத் தலைவர்கள், மற்றொரு நாட்டுக்கு இந்நாட்டின் நிலத்தை விற்கிறார்கள். இதன் பாரதூரம் விரைவிலேயே வெளிப்படும்.

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் இந்தியா மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு தடை போட்ட இதே அரசாங்கம், சீனாவுக்கு அபிவிருத்திக்காக இந்நாட்டின் நிலப்பரப்பை வழங்கியுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒருபோதும் இந்த அரசாங்கம் அனுமதியளித்ததில்லை.

வடக்குக் கிழக்கில் அழிந்து போயுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். வடக்குக் கிழக்கிலிருந்து கடனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எத்தனையோ தொழிற்துறைகளை அரசாங்கத்தால் உருவாக்க முடியும் என்றார்.

Related posts