மஹரகம பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 91 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் வங்கியின் பணிப்பாளர் குழுவில் பணிபுரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மஹரகம பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய பிபிலை பகுதியில் 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர் குறித்த வங்கியின் பணிப்பாளர் குழுவில் பணிபுரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலேயே இந்த பணமோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 91 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
மகரகம வத்தேகெதர பகுதியைச் சேர்ந்த பிரியங்கர குமார என்ற மேற்படி 44 வயது தனியார் வங்கி பணிப்பாளர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை மஜிஸ்திரேட் நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.